பாஜகவை எதிர்த்து களம் காணும் அதிமுக!: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் ஒரே கட்டமாக மே 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கர்நாடகாவில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே தான் தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சிகளுக்கும் அங்கே தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவார் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பெங்களூரு அருகே உள்ள புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் அன்பரசன் கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் ஆவார். புலிகேசி நகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் முரளியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் அன்பரசன் போட்டியிடுகிறார். அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி கர்நாடகாவில் ஒரு தொகுதியில் போட்டியிடவுள்ளது.

கர்நாடக தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிடும் என்று எதிர்பார்த்த நிலையில் தனித்து போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் போட்டியிட அதிமுக வாய்ப்பு கேட்டதாக கூறப்பட்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக வேட்பாளரை அதிமுக அறிவித்திருக்கிறது. தமிழர்கள் அதிகமுள்ள 10 தொகுதிகளில் குறைந்தது 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்ட சூழலில் ஒரு தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அகண்டா ஸ்ரீநிவாஸ் மூர்த்தி வெற்றி பெற்றிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

அதிமுக போட்டி – பா.ஜ.க. அதிர்ச்சி

கர்நாடக தேர்தலில் அதிமுக திடீரென்று தனித்து போட்டியிடுவதால் பா.ஜ.க அதிர்ச்சி அடைந்துள்ளது. அண்ணாமலை மீதான அதிருப்தியாலும் அவரின் விமர்சனத்துக்கு பதிலடியாகவும் அதிமுக தனித்துப்போட்டி என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. இணை பொறுப்பாளராக அண்ணாமலை செயல்பட்டு வரும் நிலையில் அதிமுக அதிரடி முடிவு எடுத்துள்ளது.

The post பாஜகவை எதிர்த்து களம் காணும் அதிமுக!: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!! appeared first on Dinakaran.

Related Stories: