வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரீஸ் 44லட்சம் அமெரிக்க இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் பிரதிநிதித்துவத்தின் சின்னம் என்று ஜனநாயக கட்சியின் நிதிதிரட்டும் குழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி நடக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கிய அதிபர் பைடன் விலகியதை அடுத்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஜனநாயக கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக இன்னும் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. எனினும் அவருக்கான வரவேற்பு மற்றும் ஆதரவு பெருகி வருகின்றது. இந்திய அமெரிக்கருமான துணை அதிபர் கமலா ஹாரீஸ் பெயர் முன்மொழியப்பட்ட உடனேயே கட்சிக்கு தேர்தல் நிதி குவியத்தொடங்கியது.
அதிபர் பதவிக்கு போட்டியிடம் கமலா ஹாரீசுக்கு நிதி திரட்டும் குழுவின் தேசிய துணை தலைவர் அஜய் பூட்டோரியா கூறுகையில்,இந்திய வம்சாவளியை சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரீஸ் இந்திய அமெரிக்க சமூகத்திடம் இருந்து கூடுதல் உற்சாகத்தையும் மற்றும் ஆதரவையும் பெறுகிறார். கமலா ஹாரீஸ் வெறும் அதிபர் வேட்பாளர் மட்டுமல்ல. அவர் நம்பிக்கை மற்றும் 44லட்சம் அமெரிக்க இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தின் சின்னம். கமலா ஹாரீஸ் ஒரு வாரத்திற்கும் குறைவாகவே வேட்பாளராக இருந்துள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே தனது பிரசாரத்தின் மூலமாக முழு ஜனநாயக கட்சியையும் ஒருங்கிணைத்துள்ளார் என்றார்.
The post கமலா ஹாரிஸ் 44 லட்சம் அமெரிக்க இந்தியர்களின் நம்பிக்கை: நிதிதிரட்டும் குழு தகவல் appeared first on Dinakaran.