முதலீட்டாளர்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதே கவர்னரின் உள்நோக்கம் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்க விடாமல் தடுப்பதே கவர்னரின் உள்நோக்கமாக இருக்கிறது. அவரை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தா விட்டால் தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும். முதலீட்டாளர்களிடையே தமிழ்நாடு பற்றி தவறான எண்ணத்தை உருவாக்க கவர்னர் முயற்சிக்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: அரசியல் சட்டத்தின் கீழ் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் இல்லையென்று தெரிந்திருந்தும், கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதாக அறிவித்தார்.

ஆனால் சில மணி நேரங்களிலேயே அதைக் கிடப்பில் போடுவதாக உங்களுக்குக் கடிதம் அனுப்பினார். அவருடைய நோக்கம் என்ன?
எனது தலைமையிலான திமுக அரசு, நிம்மதியாக ஆட்சி நடத்தி, மக்களுக்கு எந்த நன்மையையும் செய்து விடாமல் தடுப்பதே கவர்னரின் உள்நோக்கம். இரண்டு ஆண்டுகளாக எத்தனையோ திட்டங்களைக் கொண்டு வந்து, இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காண்பித்துள்ளோம். இதை எல்லாம் கவர்னரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு அரசுக்கு எதிராக ‘விதண்டாவாதம்’ பேசி வருகிறார். ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்.. புதிய ஒப்பந்தங்களைப் போடுவதற்காகவும், உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதற்காகவும் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு நான் சென்றேன்.

அந்த நேரம் பார்த்து, ‘நேரில் அழைப்பு விடுப்பதால் முதலீடுகள் வராது’ என்று இவர் பேசுகிறார். முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களிடையே தமிழ்நாடு குறித்த தவறான பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் கிடைத்துவிடக் கூடாது என நினைக்கிறார். நாள்தோறும் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசுவது, நல்லாட்சி இங்கு நடப்பதைப் பார்த்து அவர் எரிச்சல் அடைவதைக் காட்டுகின்றன. அவரது ஆதாரமற்ற, அரசியல் சட்டத்தை மீறிய பேச்சுகள், நடவடிக்கைகள் சமூக சலசலப்பை ஏற்படுத்துவதாக, சமூக நல்லிணக்கத்தை சிதைப்பதாக அமைந்துள்ளன. தனக்கு எந்த அதிகாரமும் கிடையாது, அரசியல் சட்டப்படி தான் ஒரு நியமிக்கப்பட்ட கவர்னர் என்பது அவருக்குத் தெரியும். தெரிந்தே, அவர் தமிழ்நாட்டு மக்களுடன், தமிழ்நாட்டின் நலனுடன் தனது விபரீத விளையாட்டைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறார்.

கவர்னர் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் செயல்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
ஒன்றிய அமைச்சகம் சொல்லிச் செய்கிறாரா, இல்லையா என்பதற்குள் நான் போகவிரும்பவில்லை. அவராகச் செய்தாலும், ஒன்றிய அரசு சொல்லிச் செய்தாலும், கவர்னருக்கு அமைச்சர்களை நியமிக்கும், நீக்கும் அதிகாரம் இல்லை என்பதே அரசியல் சட்டம். அவரை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தவில்லை என்றால், தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும். அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்த போது அதை அரசியல் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை என்று விமர்சித்தீர்கள்.

ஆனால் நீங்களே ஒருகாலத்தில் வழக்குகளில் சிக்கிய அதிமுக அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். அதற்கு உங்கள் பதில் என்ன?
இத்தகைய கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் வைப்பது என்பது அரசியல் நடவடிக்கை. ஆனால் கவர்னர் அரசியல்வாதியாக மாறக் கூடாது. அவர் அரசியல் சட்டப்படி தானே நடக்க வேண்டும். அப்படி அவர் நடக்காதது தான் எங்களது சந்தேகத்துக்குக் காரணமாக இருக்கிறது. செந்தில் பாலாஜியை பாஜ குறிவைப்பதைப் போலவே கவர்னரும் செயல்படுகிறார். அதனைத் தான் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அமலாக்கத்துறையை அரசியல் உள்நோக்கத்துடன் பாஜ பயன்படுத்துகிறது என்பது எங்களது பகிரங்க குற்றச்சாட்டு.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உள்ளான அதிமுக அமைச்சர்களை அவர்கள் ஆட்சியில் இருந்த போதும் கைது செய்யவில்லை, ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கியெறிந்த பிறகும் கைது செய்யவில்லை. ஆனால் அரசியல் பழிவாங்கும் எண்ணத்தோடு செந்தில்பாலாஜியை வருமானவரித் துறை ரெய்டு செய்கிறது. இதயத்தில் 4 அடைப்பு இருக்கிறது, அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்ன பிறகும் அது ‘நாடகம்’ என இதயத்தில் ஈரமில்லாமல் வாதிடுகிறது அமலாக்கத்துறை. அமலாக்கத்துறையின் இந்த மனித நேயமற்ற செயலையும், ‘செலக்ட்டிவ்’ கைதையும் தான் அதிகார துஷ்பிரயோகம் என்கிறோம். எதிர்க்கிறோம். எனவே, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க முடியாது என்பதே எங்களது நிலைப்பாடு.

அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்ததுமே நீங்களே முன்வந்து தார்மீக அடிப்படையில் அவரை பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறதே?
நாடு முழுவதும் குற்ற வழக்குகள் ஒன்றல்ல, பல இருக்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மாநிலங்களிலும் ஒன்றிய அளவிலும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். வழக்கில் தண்டிக்கப்படும் வரை முதல்வராக பதவியில் நீடித்தவர்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பாஜவின் ஒன்றிய அமைச்சரவையிலேயே எத்தனை பேர் மீது குற்றவழக்குகள் இருக்கிறது என்பது தேர்தல் அபிடவிட்டை பார்த்தாலே தெரியும். இப்படி நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், பாஜவில் சேர்ந்த பிறகு அவர்கள் மீதான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை நினைவூட்டிப் பாருங்கள். நான் எடுத்த நிலைப்பாடே சரியானது என நீங்களே சொல்வீர்கள். இது செந்தில்பாலாஜி என்ற ஒரு தனிப்பட்ட அமைச்சர் குறித்த பிரச்னை மட்டுமல்ல. இது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு மாநில அரசுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரம், உரிமைகள் குறித்த பிரச்னை ஆகும். இது எங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கையான மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் சம்பந்தப்பட்டது ஆகும்.

செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கினார்கள். இது தொடர்பாக நீங்கள் செந்தில்பாலாஜியைக் கண்டித்தீர்களா?
அது தவறான செயல் தான். அதனை நான் கண்டித்தேன். வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியவர்களை கைது செய்துள்ளது இந்த அரசு. தமிழ்நாட்டில் கவர்னருக்கும்-முதல்வருக்கும் இடையேயான உறவு மிகவும் சிக்கலான நிலைமைக்குச் சென்று விட்டது. இத்தகையச் சூழலில் கவர்னருடன் இணைந்து செயல்படுவது சாத்தியமா? கூட்டணிக் கட்சிகள் எல்லோமே கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். நீங்களும் அதை வலியுறுத்துவீர்களா? கவர்னர் ரவியை இங்கிருந்து மாற்றுவது மட்டுமல்ல, கவர்னர் பதவியே கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு ஆகும்.

ஒன்றியத்தில் ஆளும் பாஜ கட்சிக்கு எதிராக சற்றும் தளர்வில்லாத நிலைப்பாட்டை எடுத்துப் பேசி வருகிறீர்கள். கட்சிகளை அணி திரட்டுகிறீர்கள். அதற்காகத்தான் உங்கள் அரசையும் அமைச்சர்களையும் ஒன்றிய அரசு குறி வைக்கிறதா? ஆமாம். அதுதான் உண்மை. அகில இந்திய ரீதியில் பாஜவுக்கு எதிரான அணியை கட்டுவதில் திமுக முனைப்பாக இருக்கிறது. அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதல்வர்கள் என்னை வந்து சந்தித்து வருகிறார்கள். அவர்களிடம் பாஜவுக்கு எதிராக ஒரே அணி அமைய வேண்டும் என்பதை நான் வலியுறுத்தி வருகிறேன். பாஜ – காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்று என்னிடம் சிலர் சொன்ன ஆலோசனையை நான் முழுமையாக நிராகரித்து விட்டேன். காங்கிரசையும் உள்ளடக்கிய ஒரு அணியால் மட்டுமே பாஜவை வீழ்த்த முடியும் என்றும் சொல்லி விட்டேன்.

இவை ரகசியத் தகவல்கள் அல்ல, பொதுமேடைகளில் இதனைச் சொல்லி விட்டேன். மாநில அளவில் பெரிய கட்சி தலைமையில் கூட்டணி அல்லது தொகுதி பங்கீடு, அல்லது பொதுவேட்பாளர் என மூன்று விதமாக தேர்தலை சந்தித்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறேன். இவை அனைத்தும் பாஜவை எந்தளவுக்கு கோபப்படுத்தி இருக்கிறது. அவர்களுக்கு ‘பாட்னா பயம்’ எப்படி வந்திருக்கிறது என்பதை மத்தியப் பிரதேசத்தில் போய் பிரதமர் மோடி, திமுகவையும், தலைவர் கலைஞரையும் பழித்துப் பேசியதைப் படித்தால் உணரலாம். இதனால் தான் திமுக அமைச்சர்களை குறி வைக்கிறார்கள். திமுக அமைச்சர்களைக் குறி வைப்பதால், நாங்கள் எங்கள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. பாஜவின் வன்மத் தாக்குதலுக்குப் பிறகு தான் எங்கள் நிலைப்பாடுகளில் வேகம் அதிகமாகி இருப்பதாக நான் நினைக்கிறேன்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கெடுக்க பாஜ எந்தவிதமான சூழ்ச்சிகளிலும் ஈடுபடும். அதன் ஒருபகுதியைத் தான் மகாராஷ்டிராவிலும் இப்போது பார்க்கிறோம். மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகள் கூட்டணி அமைப்பதையும், வெற்றி பெறுவதையும், இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்படப் போவதையும் இனி பாஜவால் தடுக்க முடியாது. அகில இந்திய அளவில் பாஜ கட்சி நரேந்திர மோடியை முன்னிறுத்துகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளால், ஒரு தலைவரை முன்னிறுத்த இதுவரை முடியவில்லை. அத்துடன் பாஜவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணி இன்னும் உருவாகாத நிலையில், அக்கட்சியை அடுத்த தேர்தலில் வீழ்த்த முடியுமா?

அகில இந்திய அளவில் பாஜ கட்சியே, இன்னும் நரேந்திர மோடியை முன்னிறுத்தவில்லை. அவரைத் தான் முன்னிறுத்துவார்கள் என்று நீங்களாக கற்பனை செய்து கொண்டு கேட்கிறீர்கள். இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள். பொதுவாக கூட்டணிக்கு தலைவர் இருப்பதை விட, இலக்கு இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி, கூட்டாட்சிக் கொள்கை, அரசியல் சட்டம் என அனைத்திற்கும் எதிராகச் செயல்படும் பாஜ கட்சியை வீழ்த்துவோம் என்ற கருத்தியலே எங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post முதலீட்டாளர்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதே கவர்னரின் உள்நோக்கம் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: