நன்றி குங்குமம் டாக்டர்
டயட் என்ற சொல் இன்று மக்களைப் பாடாய் படுத்திவருகிறது. அந்த டயட் இந்த டயட் என எது வந்தாலும் ஒரு கூட்டம் அதன் பின்னே ஓடுகிறது. கொஞ்ச நாளில் அது பழையதாகி இன்னொரு டயட் வைரலாகிவிடுகிறது. ஆனால், சிலவகை டயட்கள் என்றும் தேவைப்படுபவை. அதில் ஒன்றுதான் இண்டஸ்ட்ரியல் டயட். சரி அதென்ன டயட்? நாம் இன்று பல்வேறு வகையான தொழில் செய்கிறோம்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் இருக்கிறார்கள். சிலர் இரவிலேயே தொடர்ச்சியாக வேலை செய்யும் சூழலில் இருக்கிறார்கள். சிலர், மணிக்கணக்காக ஓரிடத்தில் அமர்ந்து செய்யும் வேலையில் ஈடுபடுகிறார்கள். சிலர் ஏ.சி நிறைந்த சில்லென்ற இடத்தில் இருக்கிறார்கள். சிலர், அதிக வெப்பமான சூழலில் வேலை செய்கிறார்கள். சிலர் தூசும் தும்பும் நிறைந்த சூழலில் வேலை செய்கிறார்கள். இப்படி பலவகையான தொழில் செய்பவர்கள் இருக்கும் சூழலில் ஒவ்வொருவரும் அவரவருக்கான வேலையைக் கணக்கில் கொண்டு எடுக்கப்படும் டயட்தான் இண்டஸ்ட்ரியல் டயட். நாம் செய்யும் வேலை நம் உடலை அதன் இயல்புக்கு ஏற்ப மறுசீரமைக்கிறது. எனவே, நம் டயட்டும் அதற்கேற்ப இருக்க வேண்டும். அதனால்தான் இண்டஸ்ட்ரியல் டயட் முக்கியமாகிறது.
அந்தவகையில், கூலி தொழிலாளிகள், அலுவலக பணியாளர்கள், ஆலைகளில் பணிபுரிவோர், குளிர்ச்சியான- வெப்ப இடங்களில் பணிபுரிவோர், பயணம் செய்யும் பணியில் இருப்பவர்கள் என அவரவர் பணிக்கு தகுந்தவாறு டயட் பிளானை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சீனியர் டயட்டீஷியனான கோமதி கெளதமன்.பொதுவாக இண்டஸ்ட்ரியல் டயட்டை மூன்று விதமாக பிரிக்கலாம். முதலாவது உடல் உழைப்பு அதிகமுள்ள கூலி தொழிலாளிகள், இரண்டாவது உடல் உழைப்பு குறைவாகவும், அதேசமயம் வேலை பளு அதிகமாகவும் காணப்படுபவர்கள். மூன்றாவது ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் அலுவலகப் பணியாளர்கள்.
இதில் முதல் கட்டத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் பளு தூக்கும் பணி, வண்டி இழுக்கும் பணி, கட்டிட வேலைகள் போன்ற அதிக உடல் உழைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள், தங்களது அன்றாட உணவு முறையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அவர்களது உடல் உழைப்பை ஈடுகட்டும் அளவுக்கு சத்துள்ள உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவர்கள் காலை நேரத்தில் சிறுதானிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். சிறுதானியங்கள் நல்ல பசியை தாங்கக் கூடிய தன்மை கொண்டவை. அதுபோன்று முருங்கைக் கீரை, கருவாட்டுக் குழம்பு, முட்டை போன்றவற்றை அவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். கருவாட்டில் அதிகளவு இரும்புச்சத்து காணப்படுகிறது. அதனுடன் காய்கறிகள் சேர்த்து குழம்பாக சாப்பிடும்போது அவர்களுக்கு, நார்ச்சத்து, விட்டமின்கள், மினரல்கள் எல்லாம் கிடைத்துவிடும். செலவும் அதிகளவில் இல்லாமல் அவர்களுக்கு ஏற்றவகையில்தான் இருக்கும். இது நல்ல சத்தான உணவாகவும் இருக்கும். அதுபோல இரவில் ராகி தோசை, கம்பு தோசை, சோள தோசை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவை எல்லாம் ஆரோக்கியமும் சத்தும் நிறைந்த உணவுகளாகும்.
அடுத்த கட்டமாக, ஆசிரியர்கள், பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் பணியில் இருப்பவர்கள் போன்றோருக்கு உடல் உழைப்பு அதிகம் இருக்காது. ஆனால், அவர்கள் அதிகம் பேச வேண்டிய சூழல், சத்தமாக பேச வேண்டிய சூழல் போன்றவற்றில் இருப்பார்கள். இதனால், அவர்களது எனர்ஜி சீக்கிரம் குறைந்துவிடும். இவர்கள், கட்டாயம் காலை உணவை தவிர்க்கக் கூடாது. காலை, மதியம், இரவு என்று மூன்று வேளையும், சத்தான ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், இவர்கள், இடையிடையே ஒரு பழச்சாறு என்று தினசரி ஒவ்வொரு வகையான பழச்சாறை அருந்தலாம். காலையில் இட்லி, சாம்பார், அவல் உப்புமா, பொங்கல் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
அதேசமயம், அதிக கலோரி இல்லாத உணவுகளை இவர்கள் சாப்பிட வேண்டும். இவர்களுக்கு உடல் உழைப்பு அதிகம் இருக்காது. ஆனால், மனரீதியான அழுத்தம் அதிகம் இருக்கும். அதுபோன்று, இவர்களில் பெரும்பாலானவர்கள் உடல்பருமனாகவும் இருப்பார்கள். அதனால், இவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள், மொத்தமாக உணவை ஒரே நேரத்தில் சாப்பிடாமல் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். இவர்கள், கீரை, காய்கறிகள், சுண்டல் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
அடுத்ததாக, அலுவலக பணியாளர்கள். இவர்களுக்கும் உடல் உழைப்பு அதிகம் இருக்காது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மூளைக்கான வேலை அதிகம் இருக்கும். இவர்கள் கலோரி அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்துவிட்டு, புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் காலை உணவாக 2 முட்டை ஆம்லெட், வெஜ் சாலட், ஃபுரூட் சாலட் போன்றவற்றை சாப்பிடலாம்.
மதியத்தில் ஒரு கப் சாதம், 1 சப்பாத்தி, கொஞ்சம் காய்கறி பொரியல் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்கள், தேநீர் இடைவேளையில் முலாம் பழம் சாறு, தர்பூசணி சாறு போன்ற குறைந்த கலோரி உள்ள பழச்சாறுகளை அருந்தலாம். மேலும், விதைகள், நட்ஸ்கள், மக்கானா போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் ஏதாவது சாப்பிட வேண்டும்போல் இருந்தால், சூப் வகைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம். இரவில் 1 சப்பாத்தி- சப்ஜி, 1 கப் பழ சாலட் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்தபடியாக, அதிக பயணம் செய்பவர்கள், டிராவலிங் பணியில் இருப்பவர்கள் அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்களும், இட்லி, தோசை, அவல் உப்புமா போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இவர்கள், அலைந்து திரியும் பணியில் இருப்பதால், சுலபமாக இருக்கும் என்று பிரெட் ஜாம், கார்ன்பிளேக்ஸ் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. மைதா சேர்த்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஏனென்றால், இவர்களுக்கு அசிடிட்டி தொந்தரவுகள் அதிகம் இருக்கும். அதுபோல், இவர்கள் காலையிலிருந்து அலைந்து திரிந்து பணி புரிவதால் நேரத்திற்கு இவர்களால் சாப்பிட முடியாது. மதிய உணவை மூன்று மணி அல்லது நான்கு மணிக்குதான் சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும்போது பசி அதிகம் இருப்பதால், உணவும் அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். சில நேரங்களில் அமர்ந்து சாப்பிட இடம் கிடைக்காமல் சாப்பிடுவதையே தவிர்த்து விடுவார்கள்.
அப்படியில்லாமல், இவர்கள் சாப்பிட முடியவில்லை என்றாலும், இடையிடையே எலுமிச்சை ஜூஸ், சாத்துக்குடிஜூஸ், மோர் என வயிற்றை காயவிடாமல் ஏதாவதொன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோன்று இவர்கள் வெளி உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்களாக இருப்பார்கள். அப்படி சாப்பிடும் உணவுகள் எண்ணெயில் எதையாவது பொரித்தது, வறுத்தது போக அதே எண்ணெயில் ரசமோ, குழம்போ தாளித்து இருப்பார்கள்.
அதை சாப்பிடும்போது, உடலில் கெட்ட கொழுப்புகள் சேரும் வாய்ப்புகள் அதிகம். அதுபோன்று வெளி உணவுகளை அதிகம் சாப்பிட நேருபவர்கள், ஆவியில் வேக வைத்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அல்லது தயிர்சாதம், சாம்பார்சாதம் போன்றவற்றை சாப்பிடலாம். சுரங்கங்கள் போன்ற குளிரான இடங்களில் பணிபுரிபவர்கள் என்று எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு செரிமான தன்மை குறைவாக இருக்கும்.
அதனால், இவர்கள் ஃபேட்டி ஃபுட் என்று சொல்லக்கூடிய கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். கொழுப்புச்சத்து அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது குளிரை தாங்கக்கூடிய தன்மை கிடைக்கும். உதாரணமாக, நெய், சீஸ், பட்டர், சிக்கன், முட்டை, மட்டன் போன்றவற்றை உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள சூப் வகைகள் நிறைய சேர்த்துக் கொள்ளலாம்.
அதுவே இரும்பு உருக்கு ஆலை போன்ற வெப்பம் நிறைந்த பணிகளில் இருப்பவர்களாக இருந்தால், அவர்கள், நீர் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டது எனவே, உணவில், சுரைக்காய், செளசெள, பூசணி, புடலங்காய், பீர்க்கன், முள்ளங்கி என தினமும் ஏதாவது நீர்காயை குழம்பாகவோ, கூட்டாகவோ, பொரியலாகவோ கட்டாயம் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர் தினசரி எடுத்துக் கொள்ளலாம். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இளநீர் குடிக்கலாம். வெப்பம் அதிகமுள்ள பணியில் இருப்பவர்களுக்கு கால்சியம் பற்றாக்குறை அதிகமாக இருக்கும். எனவே, இவர்கள் குறைந்தபட்சம் தினசரி ஒரு கப் மோர் அருந்துவது மிகவும் நல்லது. மேலும், வெள்ளரிக்காய், வெங்காய தயிர் சேர்த்த சாலட் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
ரசாயண நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என்று எடுத்துக் கொண்டால், இவர்கள் இட்லி, இடியாப்பம், ஆப்பம் போன்ற ஆவியில் வேக வைத்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. சூப் வகைகள், ஜூஸ் வகைகள், மோர் போன்றவற்றை இடையிடையே எடுத்துக் கொள்ளலாம். இரவு நேரங்களில் சாலட், நார்ச்சத்து நிறைந்த பச்சை காய்கறிகள், சப்பாத்தி, கோதுமை தோசை, சிறுதானிய தோசை போன்றவற்றை எடுத்துக் கொள்வது நல்லது. மதிய உணவில் கீரைகள், காய்கறிகள், கோஸ், காலிப்ளவர் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாலை நேரங்களில் சுண்டல், வேர்க்கடலை உருண்டை போன்றவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.
பஞ்சாலை போன்ற ஆலைகள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்களுக்கு நுரையீரல் பாதிப்புகள் அதிகம் இருக்கும். இவர்கள், சத்தான புரோட்டீன் நிறைந்த உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. உதாரணமாக, பருப்பு, மீன், சிக்கன், முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் மோர், தர்பூசணி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
அதற்கு பதில், காய்கறி சூப் போன்ற மூலிகை சூப் வகைகள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இவர்களுக்கு பொதுவாக உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும். அதிலும் கோடைக் காலங்களில் இன்னும் உஷ்ணம் அதிகமாக இருக்கும். எனவே, வாரத்தில் இரண்டு நாட்கள் காலை நேரத்தில் இளநீர் அருந்துவது நல்லது. மதியத்தில் இவர்கள், வத்தக்குழம்பு, காரக்குழம்பு போன்ற அதிக காரம் உள்ள குழம்பு வகைகளை தவிர்க்க வேண்டும். அப்படியே சாப்பிட நேர்ந்தாலும், அதனுடன் பருப்பை தினமும் சேர்த்துக்
கொள்வது நல்லது.
பொதுவாக, வேலைக்கு செல்பவர்கள் சுலபமாக பின்பற்றக் கூடிய டயட் என்றால், காலையில், இட்லி, தோசை, அவல் உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அவலில் நிறையவே சத்துக்கள் இருக்கிறது. இவை செய்வதற்கும் சுலபமானது. மதியத்தில் முடிந்தளவு கலந்த சாதத்தை தவிர்த்துவிட்டு, ஒரு குழம்பு, ஒரு காய் பொரியல் போன்றவற்றை எடுத்துக் கொள்வது நல்லது. அது முடியவில்லை என்றால், புளிசாதம், எலுமிச்சை சாதம் என எண்ணெய் அதிகம் சேர்க்கும் கலந்த சாதத்தை தவிர்த்துவிட்டு, சாம்பார் சாதம், புதினா சாதம், மல்லித்தழைசாதம், வெஜிடபுள் ரைஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்வதோடு, அதனுடன் ஏதேனும் ஒரு காய் பொரியல் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
பொதுவாக நாம் சிறுவயது முதல் என்ன டயட் பின்பற்றி வருகின்றோமோ அதுதான் 45 வயதுக்கு மேல் நமது உடலில் செயல்பட தொடங்கும். எனவே, முடிந்தளவு பச்சைகாய்கறிகள், ஆவியில் வேக வைத்த உணவுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். அதுபோல் குழந்தைகளுக்கு பிஸ்கட், பிரெட், நூடுல்ஸ், பாக்கெட் ஸ்நாக்ஸ் போன்றவற்றை கொடுப்பதை தவிர்த்துவிட்டு, வேர்க்கடலை உருண்டை, உடைத்தக்கடலை உருண்டை, எள் உருண்டை, கம்பு உருண்டை, ஏதேனும் ஒரு சுண்டல், அவித்த வேர்க்கடலை போன்றவற்றை கொடுத்துப் பழகிவிட்டால் அவர்கள் ஆரோக்கியமும் எதிர்காலமும் நன்றாக அமையும்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
The post இண்டஸ்ட்ரியல் டயட்! appeared first on Dinakaran.