தெரிந்த கேள்விகள்… தெரியாத பதில்கள்…

நன்றி குங்குமம் தோழி

இன்று மக்களுக்கு போதுமான சிந்திக்கும் திறனும், கேள்வி கேட்கும் திறனும் வளர்ந்திருக்கிறது
என்றே சொல்லலாம். முன்பெல்லாம் நோய் பற்றிய விழிப்புணர்வு எதுவும் இருக்காது. ஆகையால் நோயினால் வரும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால், இப்போது அப்படி இல்லை. ஏன் வருகிறது, எப்படி சரி செய்வது, உடலில் என்ன நடப்பதால் இவ்வாறு நோய் உருவாகிறது என்பது வரை அனைத்தையும் இன்று நம்மால் மருத்துவர்களிடம் கேள்வி கேட்டு புரிந்துகொள்ள முடிகிறது.எனவே, என்னிடம் பொதுவாகக் கேட்கப்படும் சில
கேள்விகளையும், அதற்கு அளித்த பதில்களையும் மற்றவர்களுக்கும் உதவும் என்பதற்காக இங்கே அதே கேள்வி-பதில் வடிவத்தில் தருகிறேன். இதன் வாயிலாக மேலும் சிலருக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன்.

1. ஒரு தடவை முதுகு வலி வந்தால் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்ப வருமா?

இந்தக் கேள்விக்கு பதில் நம்மிடமே உள்ளது. நாம் முதுகு வலிக்கான முறையான உடற்பயிற்சிகளை வாழ்நாள் முழுவதும் செய்து வந்தால் வலி வரவே வராது. ஆனால், செய்யாமல் இருந்தால் அடிக்கடி முதலில் வலி வர ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் தினசரி
வலியுடனே இருப்பது போன்று மாறிவிடும். எனவே, வருமுன் முதுகினைக் காப்பாற்றிக் கொள்வோம். அப்படி இல்லையெனில், ஒருமுறை வந்த பின்பாவது முறையான பயிற்சிகளை எடுத்துக்கொள்வது முக்கியம்.

2. கால் முட்டி வலிக்கு பத்து நாட்கள் இயன்முறை மருத்துவம் எடுத்ததும் சரியாகிவிட்டது. ஆனால், இப்போது மூன்று மாதங்கள் கழித்து திரும்பவும் வலிக்கிறது. அது ஏன்?

இதற்கும் பதில் உடற்பயிற்சிகளே. சாதாரண வலி முதல் எலும்பு தேய்மானம், சவ்வு கிழிதல் என எல்லா வகை மூட்டு வலிக்கும் தீர்வு பயிற்சிகள்தான். இயன்முறை மருத்துவம் உதவியோடு வலி குறைந்த பின் அவர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை வலி இல்லையென்றாலும் வாழ்நாள் முழுக்க செய்து வரவேண்டும்.

3. இயன்முறை மருத்துவர்கள் என்பவர்கள் மசாஜ் செய்பவர்கள்தானே?

இயன்முறை மருத்துவத்தில் பலவகை சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் ஒன்று மசாஜ் செய்வது. மேலும், வலி நீங்குவதற்கு மசாஜ் போன்று ஒருவகை நுட்பத்தையும் (Technique) கையாள்வர். எனவே, சிலர் இப்படி இன்னும் அறியாமையிலும், கேலியாகவும் கேட்கிறார்கள் என்பதால், மேலும் விழிப்புணர்வுகள் தொடர்ந்து தேவைப்படுகிறது.

4. கழுத்துக்கு ‘காலர் பெல்ட்’ போட்டும் கழுத்து வலி குறையவில்லையே, ஏன்?

கழுத்துக்கான காலர் பெல்ட் போடாமல் கூட ஒருவரின் கழுத்து வலியை முற்றிலும் குறைத்து மீண்டும் வராமல் தடுக்கலாம். மேலும், காலர் பெல்ட் என்பது ஒரு தற்காப்புக் கவசம். சமமற்ற இடங்களில் வண்டியில் செல்லும்போது கழுத்து சவ்வுகளுக்கு மேலும் பாதிப்பு வராமல் இருக்கப் பயன்படுத்துவது என்பதால், வலி நிவாரணி இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

5. கால் முட்டி வலி வந்தால் அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் கடைசித் தீர்வு
என்கிறார்களே, அப்போ இதில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு?

90 சதவிகிதம் மூட்டு சேதமடைந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை தேவை. மேலும், அவர்களின் வயதிற்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அதிக வயதானவர்கள் இதனை செய்துகொள்வதால் பயன் இல்லை. ஆகவே, வலி வந்த ஆரம்பம் முதலே உடற்பயிற்சிகள் செய்து வருபவர்களுக்கு என்றுமே அறுவை சிகிச்சை தேவை இருக்காது. ஏனெனில், பயிற்சிகள் செய்வதால் மேலும் தேய்மானம் ஆவதை தடுக்கலாம்.

6. உடற்பயிற்சிக் கூடத்தில் இயன்முறை மருத்துவர்கள் வேலை செய்வதை பார்க்கிறோம். இங்கு இவர்களின் பங்கு என்ன?

இயன்முறை மருத்துவர்கள் ஒருவருக்கு தசைகளில் எவ்வளவு திறன் இருக்கிறது என முதலில் ஆராய்ந்து பின் அதற்கேற்ற உடற்பயிற்சிகள், அதன் வகை, எண்ணிக்கை, எத்தனை முறை செய்ய வேண்டும் எனப் பரிந்துரை செய்வர். மேலும், எப்படி செய்யவேண்டும்,
செய்யக்கூடாது, எப்போது எந்தப் பயிற்சியை செய்ய வேண்டும் என ஆலோசனை செய்து பரிந்துரைத்து கற்றுத்தருவர். இதனை உடற்பயிற்சிக் கூடத்தில் மட்டுமல்லாமல், வீட்டிலிருந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கும், கிளினிக்கிற்கு வந்து எடை குறைப்பவர்கள் என யாவருக்கும் கற்றுத்தருவர்.

7. சிறப்புக் குழந்தைகளை இயன்முறை மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக அவர்களின் பெற்றோர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வாறு குழந்தைகளுக்கும் இயன்முறை மருத்துவம் உள்ளதா?

ஆமாம். சிறப்புக் குழந்தைகளுக்காக சிறப்பான பிரத்யேக உடற்பயிற்சிகள் விளையாட்டு வழியில் இருக்கிறது. அவர்கள் நிற்க, நடக்க, இயல்பாய் மற்றக் குழந்தைகளைப் போல பள்ளி செல்ல பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், இவ்வகை தெரபிகளை இயன்முறை மருத்துவர் சிறப்புப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு வழங்குவர் என்பதால், அங்கும் இவ்வகை சிகிச்சைகளைப் பெற்றோர்கள் பயன்
படுத்திக் கொள்ளலாம்.

8. கால் சவ்வு கிழிந்ததற்கு அறுவை சிகிச்சை செய்த பின் இயன்முறை மருத்துவம் செய்யச் சொல்கிறார்கள். அது ஏன்?

எந்த ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின்னும் இயன்முறை மருத்துவம் அவசியம். இதில் காது, கண் போன்ற உறுப்புகளின் அறுவை சிகிச்சைக்குத் தேவையில்லை. அறுவை சிகிச்சையால் நாம் சில நாட்கள் முதல் மாதங்கள் வரை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் இருப்போம். அதனால் இதற்கு உடற்பயிற்சிகள் தேவைப்படும். மேலும், அறுவை சிகிச்சை செய்துள்ள இடத்தில் உள்ள தசைகளையும் அறுத்து சிகிச்சை செய்திருப்பார்கள். இதனால் அந்தத் தசைகளுக்கு மீண்டும் அதே வலிமையை தரவும் உடற்பயிற்சிகள் செய்யப்படுகிறது.

9. உடற்பயிற்சி செய்வதால் நிறைய பலன் இருக்கிறது சரி. ஆனால், உடற்பயிற்சிக் கூடத்திற்குப் போகாமல் வீட்டிலிருந்தே செய்யலாமா?

தாராளமாகச் செய்யலாம். ஒரு சில உபகரணங்கள் அதாவது, டம்பெல்ஸ் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் இயன்முறை மருத்துவர் கற்றுக்கொடுப்பர். அப்படி இல்லையெனில் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி உடற்பயிற்சிகளை கற்றுக்கொண்டும் வீட்டில் செய்யலாம். அப்படியும் இல்லையெனில், வீட்டிற்கு இயன்முறை மருத்துவர் வந்து கற்றும் கொடுப்பர். அப்படியும் செய்யலாம்.

10. கால் முட்டி வலி வந்தால் கீழே உட்காரக் கூடாது என எலும்பு மருத்துவர்கள்
சொல்கிறார்களே… இதில் இயன்முறை மருத்துவ கருத்து என்ன?

90 சதவிகிதம் முட்டி தேய்ந்துவிட்டால் உட்கார முடியாது கால் வளைந்துவிடும். ஆனால், மற்றபடி முட்டி வலி வந்தவர்கள் தாராளமாக கீழே உட்காரலாம். அதிலும் கீழே அமர்ந்து காலை நீட்டி முதுகினை நேரே வைத்து உட்காருவது நல்லது. வலி இருக்கும் நேரங்களில் அதிகமாகக் கீழே அமர்வதையும் தடுக்க வேண்டும். மேலும், இன்றைய சூழலில் குறைந்தது ஒரு நாளுக்கு பத்து தடவை மட்டுமே நாம் கீழே அமர்கிறோம். அதனால் பயம் இல்லாமல் தாராளமாக கீழே அமரலாம்.

11. கருவுற்றிருக்கும்போது உடற்பயிற்சிகள் செய்வதால் கருவிற்கு பாதிப்பு வருமா?

கர்ப்பக் காலத்தில் கர்ப்பப்பை வாய் சீக்கிரமே திறப்பது, ஐ.வி.எஃப் (IVF) சிகிச்சை போன்ற சிக்கல்கள் உள்ள சில கர்ப்பிணிகளுக்கு மட்டும் உடற்பயிற்சிகள் செய்யாமல் ஓய்வில் இருக்கவேண்டும். மற்றபடி அனைவரும் உடற்பயிற்சிகள் செய்யலாம். செய்ய வேண்டும். இதனால், சுகப்பிரசவத்திற்கு மட்டுமல்லாமல், குழந்தை பிறந்த பின்னும் இவை உதவும் என்பதால், மூடநம்பிக்கைகளை நினைத்து பயம் கொள்ளாமல் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகவும்.

12. யூடியூப், டிவி பார்த்தே உடற்பயிற்சிகள் செய்து கொள்ளலாம்தானே? ஏன் இயன்முறை மருத்துவரின் உதவி அவசியம்?

ஒவ்வொருவரின் உடலும், தசைகளும், அவர்களின் திறனும் ஒவ்வொரு மாதிரி என்பதால் பொதுவாகக் கற்றுத்தரப்படும் உடற்பயிற்சிகள் பலனளிக்காது. இதனால் தசைகளில் காயம் ஏற்படவும் வாய்ப்புண்டு என்பதால், ஆரோக்கிய காரணங்களுக்கு செலவழிக்க யோசிக்காதீர்கள்.

13. எனக்கு எப்போதும் கணினி முன்பே அமர்ந்து வேலை செய்வதால் உடல்
வலிக்கிறது. இதற்கு இயன்முறை மருத்துவத்தில் ஏதாவது தீர்வு இருக்கிறதா?

நிச்சயம் இருக்கிறது. மொத்த உடலுக்கும் வலி வராமல் இருக்கவும் பயிற்சிகள் இருக்கிறது. அதேபோல கழுத்து மற்றும் முதுகு வலி அமர்ந்து வேலை செய்யும்போது வரும் என்பதால், அதற்கென பிரத்யேக உடற்பயிற்சிகளும் உள்ளன. வலி வரும் முன்னே அல்லது வலி வந்த ஆரம்பத்திலேயே இதனை அறிந்து தினசரி உடற்பயிற்சிகள் செய்துகொள்வது அவசியம்.

14. மைதானத்தில் விளையாட்டு வீரர்களுக்கு அடிபட்டவுடன் அங்கேயே இயன்முறை மருத்துவர் என்னவென்று பரிசோதனை செய்து விளையாடலாமா, கூடாதா எனச் சொல்வார்கள். விளையாட்டுத் துறையில் வேறு என்ன பங்கு இருக்கிறது?

ஆட்ட நாளுக்கு முன்பு உடற்பயிற்சிகள் கற்றுக் கொடுத்து அவர்களை செய்யச் சொல்வர். இதனால், வீரர்களுக்கு ஏதேனும் தசைக் காயங்கள் (Injury) வராமல் தடுக்க முடியும். ஆட்ட நாளன்று ஏதேனும் காயம் ஏற்பட்டால் அந்த நேரத்திற்கு அவசர சிகிச்சையும் செய்வர். காயம் ஏற்பட்டு விளையாட முடியாதவாறு இருந்தால், அவ்வீரர்களை மீண்டும் முன்பு போல் இயல்பாய் மாறி விளையாடுவதற்கு அக்காயத்திற்கான சிகிச்சை, பயிற்சிகளும் வழங்குவர்.

15. உடற்பயிற்சிகள் செய்து முற்றிலும் தொப்பையை குறைக்க முடியுமா?

பெரும்பாலான மக்கள் வயிற்றுக்கு மட்டும் ஏதேனும் பயிற்சிகள் செய்தால் தொப்பையைக் குறைக்கலாம் என நினைக்கின்றனர். இது முற்றிலும் மூடநம்பிக்கை. உடலில் உள்ள கொழுப்புகள் எந்த இடத்திலிருந்து கரைய வேண்டும் என முடிவு செய்வது நம் மூளையே. மேலும், பொதுவாகவே தொப்பை கடைசியாகத்தான் கை கால்களில் உள்ள கொழுப்புகள் குறைந்தபின் குறையும். அதனால், நீண்ட கால உடற்பயிற்சிகள், வாழ்க்கை முறை மாற்றம், உணவுக் கட்டுப்பாடு போன்ற எல்லாவற்றையும் ஒருசேர செய்து வரும்போது நிச்சயம் குறையும். இயன்முறை மருத்துவ அறிவுரைகளை கொண்டு மேலும் ஆரோக்கியத்தில் சிறக்க வாழ்த்துகள்.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

 

The post தெரிந்த கேள்விகள்… தெரியாத பதில்கள்… appeared first on Dinakaran.

Related Stories: