செவ்விது செவ்விது பெண்மை!

நன்றி குங்குமம் டாக்டர்

மனிதியும் மருத்துவமும்!

உளவியல் மருத்துவர் ஷாராணி

‘மனிதி வெளியே வா’ என்று கொண்டாடும் பெண்களின் மனதை புரிந்துகொள்வது கஷ்டம் என்று நகைப்பதும் உண்டு. மனதை புரிந்துகொள்வதுதான் கஷ்டம் என்றால், அவளின் உடலைப் புரிந்துகொள்வதற்கு மருத்துவத்தில் தனி பிரிவே உள்ளது. ஆம் உண்மை தான். நகைச்சுவை அல்ல. ஆண்கள் மருத்துவம் என்ற பிரிவு தனியாக இல்லை ஆனால் மகப்பேறு மற்றும் பெண்கள் மருத்துவம் என்பது மிக பெரிய மருத்துவ பிரிவு.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பெண்ணின் உடலையும் மனதையும் சாதாரணமாகப் புரிந்து கொள்ள இயலாது. அதை சில பகுதிகளாகப் பிரித்து ஆராய்ந்து, அந்தந்தப் பிரிவுகளில் உள்ள விஷயங்களை ஆய்வு செய்து அதிலிருக்கும் அறிவியலை, எளிமையான மக்களுக்கு புரியும்படியான விதத்தில் எழுதுவதுதான் இந்த தொடரின் நோக்கம்.

ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது அவள் வம்சாவளியில் பிறக்கும் பிள்ளைகளின் பிறப்புக்கான கருமுட்டைகள் அவளுடன் வயிற்றில் பிறக்கிறது. ஆண்களுக்கு அப்படி இல்லை. பருவம் வந்த பிறகுதான் விந்துகள் உருவாகின்றன. அவையும் தொண்ணூறு நாட்கள் சுழற்சி முறையில். இப்படி பிறக்கும்பொழுதே சந்ததியினரை சுமக்கும் பொறுப்பில் பிறக்கும் பெண்களின் உடலிலும் மனதிலும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். பெண் குழந்தையை பராமரிக்கும் விதத்திலேயே வித்தியாசம் இருக்கிறது.

அவளின் உடல் மற்றும் மனதின் வளர்ச்சி ஆண் பிள்ளைகளில் இருந்து வித்தியாசமாக இருக்கிறது. அவளுக்கு போடும் தடுப்பூசிகள் வேறுபடுகிறது. அவளின் பருவ மாற்றங்கள் வெறுமனே ஒளிந்து பேசி தட்டிகழிக்கும் விளையாட்டல்ல, ஊரு கூடி, சீர் வைத்து வரவேற்கும் பெருவிழாவாகும்.பெண் குழந்தையின் வளர்ச்சி தாயின் கருப்பையில் இருக்கும்போதே ஆரம்பமாகிறது. நல்ல ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைய குழந்தைக்கு மிதமான சூழல் மற்றும் போஷனையான உணவு கிடைப்பது அவசியம். தாயின் உடல் ஆரோக்கியமும், மனநிலையும் குழந்தையின் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கக்கூடியது.

பிறவியிலேயே, குழந்தைகள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் பிறகு பழக்கப்படுத்தப்படும் பழக்கவழக்கங்கள், குழந்தைகளின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. பருவமடைதல் தொடங்கும் வயதில், உடல் அளவுகள், மனநிலை, மற்றும் மனோவிகாரங்கள் உடல் மற்றும் மனநிலையை அதிகமாக பாதிக்கும். இப்போதுதான், பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குத் தேவையான முழுமையான ஆதரவு மிக அவசியமாகிறது.

கல்லூரிக்குச் செல்லும் காலங்களில் பெண்கள் சற்று சுதந்திரமாக இருக்கின்றனர்தான். ஆனால், அங்கும் ஃபேஷன், ட்ரண்ட் என்ற பெயரில் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவது. கார்பனேடட் பானங்கள் பருகுவது என்று கண்டதையும் உண்டு உடல் எடை அதிகரித்துக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் டயட் என்ற பெயரில் கண்ட டயட்டையும் பின்பற்றி உடலைக் கெடுத்துக்கொள்கிறார்கள். இந்தியாவில் இளம் பெண்களிடம்தான் இரத்த சோகை அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. இளம் பெண்கள் என்றால் வசதியில்லாத ஏழை வீட்டுப் பெண்கள் மட்டுமில்லை. நல்ல வசதியான பணக்கார வீட்டுப் பெண்கள்கூட இரத்த சோகையுடன் தான் இருக்கிறார்கள். என்ன காரணம் என்று கேட்டால் ஹெல்த்தியான வாழ்க்கைமுறை பற்றிய விழிப்புணர்வு இன்மைதான்.

திருமணத்துக்குப் பிறகு, பெண்கள் கர்ப்பமாகும் நிலையைச் சந்திக்கின்றனர். கர்ப்பம் மற்றும் குழந்தைப் பிறப்பு என்பது பெண்களின் உடல்நிலை மற்றும் மனநிலைக்கு மிக முக்கியமான மாற்றமாகும். கர்ப்பமாக இருக்கும் போது, ஹார்மோன் மாற்றங்கள், உடல் எடை அதிகரிப்பு, மற்றும் உடலியல் மாற்றங்கள் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இந்நிலையில், கர்ப்ப காலத்தில் பெண்களுக்குத் தேவையான தன்னம்பிக்கை மற்றும் மனஅமைதியை வழங்குவது அவசியம். மனநிலைப் பாதிப்புகள் அல்லது அழுத்தம் வந்தால், அது தாயின் ஆரோக்கியத்தையும், அடுத்த தலைமுறையையும் பாதிக்கும்.

பிறந்தவீடு புகுந்தவீடு என்று இரு துருவங்கள் ஆண்களின் அனுபவத்தில் நினைத்துக்கூட பார்த்திடாத விஷயங்கள். அம்மா வீட்டிலும் அவள் வேறு வீட்டுக்குச் செல்லும் பிள்ளை, புருஷன் வீட்டிலும் அவள் வேறு குடும்பத்திலிருந்து வந்த பிள்ளை. தன் கணவன், தன் பிள்ளை, தன் குடும்பம் என்று வாழும் இல்லத்து அரசிகள் சாப்பிட்டார்களா என்று கேட்கக்கூட அவரின் ராஜாங்கத்தில் ஆள் இல்லை. பேர் மட்டும் அரசி என்று மெச்சிக் கூப்பிடுவது. பிள்ளை பிறந்துவிட்டால் பிள்ளைதான் தனது உலகம் ஆக வேண்டும்.

இல்லையெனில் நீ நல்ல தாய் அல்ல. பிள்ளைகளுக்காக வேலையை விட்டு வீட்டை பார்த்துக்கொண்டால் இதற்கு எதற்கு இவள் படித்தாள் என்ற ஏளனம் இல்லை என்றால் பிள்ளையை விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறாள் சரியான கல்நெஞ்சக்காரி என்ற பெயர். இவையெல்லாம் பரவாயில்லை. பிள்ளை இல்லை என்றல் மலடி என்று ஒதுக்கிவைப்பது. இதெல்லாம் தாங்கி வாழ்ந்தால் தியாகி பட்டம்; இல்லை என்றல் அரக்கி பட்டம். அரசி எப்படி அரக்கி ஆவாள்? பெண்ணியம் பேசி, தன்னம்பிக்கையோடு, கூண்டை கொத்தி திறந்து வெளியே வந்தால் அவள் அடங்காதவள் ஆவாள்.

சமூகம்தான் இதையெல்லாம் செய்கிறது என்று பார்த்தால், உடல்நிலை ஒரு படி மேலே சென்று மாதா மாதம் குருதிப்புனல் அருவியாகக் கொட்டும். அது நிறைய கொட்டினாலும் கஷ்டம், சிறிது அளவு குறைவாக போனாலும் கஷ்டம். கொட்டவே இல்லை என்றாலும் கஷ்டம். இதற்குப் பிறகு இந்தப் பெண்ணின் உடலை குத்தகைக்காக எடுத்துக்கொள்ளும் சிசுக்கள். உடலில் இருந்து வெளியேறினாலும், மாரின் காம்பை பால் குடிக்கிறேன் என்ற பெயரில் கடித்து ருசிக்கும் பிள்ளைகள். சுகப்ரசவமா, சிசேஷிரியனா என்று கேட்டு கொடுமைப்படுத்துவது ஒருபக்கம்.

இதைக் கொடு அதைக் கொடுக்காதே என்று இலவச அட்வைஸ்கள் இன்னொரு பக்கம். இப்படியே பிரசவத்துக்குப் பிந்தைய காலம் ஓடுகிறது. பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தம் (Post partum depression) இடம் சிக்காமல் தப்பிப் பிழைத்து பிள்ளைகளுக்குச் சாப்பாடு, படிப்பு, ஆடை, அலங்காரம் என்று ஓடிய பிறகு உக்காரும் பருவத்தில் வந்து விடுகிறது இறுதி மாதவிடாய். குருதிப்புனல் நிற்கப் போகிறது என்று சந்தோஷப்பட ஒரு நிமிஷம்கூட கொடுக்காமல் வாட்டி எடுக்கிறது உடலும் மனமும்.

இறுதிக் காலத்தில் பெண்களின் உடல் மற்றும் மனநிலையில் எதிர்கொள்ளப்படும் சவால்களில், முதலில் உடல் சவால்கள் அடங்கும். முதுமையில் எலும்புகள் தளர்ச்சியடைதல், ஆஸ்டியோ போரோசிஸ், நீர்ச்சத்து குறைவதால் வலிகள், மற்றும் நழுவல், உடல்நலக்குறைவுகள் அதிகமாகும். இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகள் கூடுதல் ஆபத்தை உருவாக்கும். உடல் நலத்திற்கு இணையான மன சவால்களும் அதிகமாகும். தனிமை, நண்பர்கள் மற்றும் குடும்பத்தை இழப்பதால் ஏற்படும் சோகம், மன அழுத்தம், நினைவாற்றல் குறைபாடு மற்றும் மரண பயம் முதியவர்களை அதிகமாகத் தாக்கும்.

இதற்கு மேலும், குடும்பத்தின் ஆழமான ஆதரவு முக்கியமாகும், குறிப்பாக பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முழுமையாக உடனிருப்பது முதியவர்களுக்கு மன அமைதியைக் கொடுக்கும். இதற்காக, வீட்டு மருத்துவப் பராமரிப்பு அல்லது ஹோஸ்பிஸ் பராமரிப்பு அவசியம், இது இறுதிக் காலத்தில் நம்பிக்கை மற்றும் ஆரோக்கியமான முடிவுகளைப் பெற உதவும். இப்படி பெண்ணின் நிலைகளை பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். பேசி கொண்டேதான் இருக்கிறார்கள்.

இதில் நுணுக்கங்கள் என்னவெல்லாம், இதையெல்லாம் கையாள்வது எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம். உடலின் பல உறுப்புகள் ஒரேபோல் இருந்தாலும் பெண்ணிற்கு மாரடைப்பு வருவதற்கும் ஆணிற்கு மாரடைப்பு வருவதற்கும் வித்யாசம் இருக்கிறது. இதை தெரிந்து கொண்டால் தானே ஏதாவது செய்து தவிர்க்கவோ அல்லது அதை எதிர்கொள்ளவோ முடியும். அதற்கான தேடலைதான் இந்த கட்டுரை செய்கிறது. பெண்களின் உடல் மற்றும் மனநலன் பற்றிய முழுமையான கட்டுரை ஆரம்பிக்க வேண்டும் என்றால், நாம் அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆராய வேண்டும். பெண்களின் உடல் நலனும், மனநலனும் அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெரும் மாற்றங்களுக்கு உட்படுகிறது. இதனால், நாம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டியதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பிறப்பு முதல் முதிர்ச்சி வரை, ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் என்னவெல்லாம் உடல்நல பிரச்னைகள், மனநல பிரச்சனைகள், இதையெல்லாம் அணுக ஏதேனும் புதிய ஆராய்ச்சி முடிவுகள் இருக்கிறதா என்பதையெல்லாம் ஒருவொரு கட்டுரையில் விரிவாகப் பார்க்க போகிறோம். ஒவ்வொரு வாழ்க்கைப்படியும் உடல், மனநிலை மற்றும் சமூக ஆதரவை அடிப்படையாகக்கொண்டு பெண்கள் ஆரோக்கியமாக வாழ முக்கியத்துவம் வாய்ந்தது. அதை இந்தத் தொடர்வழியே ஆராய்வோம்.

The post செவ்விது செவ்விது பெண்மை! appeared first on Dinakaran.

Related Stories: