மூளையின் முடிச்சுகள்

நன்றி குங்குமம் தோழி

உடலை விட்டு மனம் வெளியேறுதல்

என்ன… உடலை விட்டு மனம் வெளியேறுமா? படிக்கும் போதே கொஞ்சம் பதற்றமாய் இருக்கிறதா? அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. அறிவியல் ரீதியாக நமக்குள் என்ன நடக்கிறது என்பதை எடுத்துக்கூறுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். சமீபத்தில் மதுரை புத்தக கண்காட்சியில் சாமி பாடல் ஒன்றுக்கு, தங்களுக்கு அருள் வந்தது போல் பள்ளி மாணவிகள், வளைந்து நெளிந்து கூட்டமாக ஆடியதும், அருகே இருந்த சக மாணவிகள் சாமி வந்து ஆடுகிற தங்கள் தோழிகளை அடக்க முயற்சித்த காட்சிகள், சமூக வலைத்தளங்கள் முதல் தொலைக்காட்சி செய்திகள் வரை வைரலானது. இந்த சம்பவம் மூலமாக நம் மனதுக்குள் நடக்கும் சில விசித்திரங்களைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.ஒரு செயலை நாம் செய்யப் போகிறோமென்றால், நமது உடலும் மனமும் இணைந்தேதான் செயல்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சில நேரங்களில் மட்டும் நமது வாழ்வில் நடக்கும் விரும்பத்தகாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகள் நடைபெறும் பொழுது, நமது மனம் அதில் சமூக வரைமுறைகளுடன் Associate ஆகாமல் Dissociate ஆகின்றது. அதாவது, சாமி பாடல் உக்கிரமாக கேட்கும் போது, பாடலை ரசிக்கலாம் அல்லது சேர்ந்து பாட்டு பாடலாம், ஜாலியாய் நடனம் கூட ஆடலாம். ஆனால், நமது பொது ஜனங்கள், தனக்குள் சாமி புகுந்து விட்டது என்றும், தனக்கு அருள் வந்திருக்கிறது என்றும் கூறுவதைத்தான், சமூக விதிமுறைகளுடன் நடக்கக்கூடிய மனம், இந்த மாதிரியான நேரங்களில் மட்டும் யாரையும் கண்டுகொள்ளாமல், நம்மில் இருந்து விலகி நின்று தனியாகப் பேசும் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாய் இருக்கிறது. இதைத்தான் மனநல மருத்துவத்தில் Dissociative Disorder என்கிறார்கள். ஒரு வகையான தனக்குத் தானே பாதுகாப்பு செய்து கொள்ளும் நடவடிக்கை இது எனலாம். பெரும்பாலும் இந்த நிலை ஒரு சில நாட்கள் அல்லது ஒரு வாரத்தில் தானாகச் சரியாகும். சில சமயங்களில் தொடர்ந்து இந்நிலை நீடிக்கும் பொழுதும் அல்லது
தினசரி வாழ்க்கையை பாதிக்கும் பொழுதும் இதற்கு சிகிச்சை அவசியமாகின்றது.இந்த Dissociative disordersல் கீழ்வரும் மூன்று நிலைகளும் பார்க்கப்படுகிறது.

* Dissociative Amnesia
* Dissociative Conversion Disorder
* Dissociative identity disorder

டிசோசியேட்டிவ் கன்வெர்சன் டிஸார்டர்
(Dissociative Conversion Disorder)

ஒரு நபரை பார்க்கும் பொழுது அவர் ஆரோக்கியமாக இருப்பது போல் நமக்குத் தெரிந்தாலும், திடீரென்று பார்வை தெரியாமல் போவது, வாய்பேச முடியாமல் போவது, கை கால்கள் செயல் இழந்ததைப் போன்று இருப்பது, எழுந்து நடக்க முடியாத நிலை போன்ற அறிகுறிகள் அவருக்கு ஏற்படும். இது ஏற்பட்டாலே குறிப்பிட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைகள் அனைத்துமே செய்தாலும், உடலில் எந்தவித பாதிப்புகளும் அவரின் உடல் பரிசோதனையில் சுத்தமாகத் தெரியாது. ஆனால் தொடர்ந்து உடல் உறுப்புகளில் ஏதாவது ஒன்று செயல்படாத மாதிரியான அறிகுறிகள் அவருக்குத் தொடர்ந்து தென்படும். இந்நிலையில் இதற்கான காரணம் என்ன என்பதை மனநல மருத்துவரிடம் ஆலோசிக்கும் பொழுதே, மனரீதியான பிரச்னையின் தாக்கத்தில், கையாளத் தெரியாமல், குறிப்பிட்ட நபருடைய உடல் இயக்கத்தின் செயல்பாடுகள் பாதிக்கிறது என நமக்குத் தெரியவரும்.உதாரணத்திற்கு கொடுமைப்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல், பெற்றோர் கவனிப்பின்மை, புறக்கணிப்பு போன்ற ஒருசில காரணங்களால், பள்ளியில் நன்றாக படித்துக் கொண்டிருக்கும் மாணவன் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. விளைவு, நாளை நடைபெறவிருக்கும் முக்கியமான தேர்வுக்கு படிக்கவில்லை. அதனால் தேர்ச்சிப் பெறமாட்டோம் என்கிற எண்ணம் அவனுக்குள் ஏற்படுகின்றது. வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான சம்பவங்களின் தாக்கத்தையும், தேர்வின் மீதான பயத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் மாணவனின் மனம் Associate ஆகாமல் Dissociate ஆகின்றது. விளைவு, திடீரென வலது கை உணர்ச்சியின்றி செயல்பட முடியாத நிலைக்கு போனவுடன் மருத்துவரை பார்க்கின்றனர். பலகட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே மருத்துவர் உடல் மற்றும் நரம்பில் எவ்வித பிரச்னைகளும் இல்லையென்று கூறியதும், அடுத்தகட்டமாக மனநல மருத்துவரை அணுகுகின்றனர். பிரச்னையின் தீவிரத்தைக் கேட்டு, மாணவனை பரிசோதித்த பிறகு, அதற்கான வழிமுறைகளை பெற்றோரிடம் மருத்துவர் கூறும்பொழுதே பிரச்னையின் தீவிரத்தில் இருந்து வெளிவர அவர்களால் முடிகிறது. அதாவது, குறிப்பிட்ட மாணவனின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான சம்பவங்களை கையாளப் பழகுவதன் மூலமும், மீண்டும் அவன் மீதான நம்பிக்கையை உருவாக்கிக் கொடுத்து, படிப்பதற்கான சூழலை அமைத்துத் தருவதன் மூலமாக மாணவனுக்குள் ஏற்பட்டுள்ள Associative நிலையிலிருந்து அவர் மீண்டுவர
உதவியாக இது இருக்கும்.

டிசோசியேட்டிவ் அம்னீசியா
(Dissociative Amnesia )

இது வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும் முக்கியமான நிகழ்வுகளை மறந்துவிடும் நிலையாகும். பொதுவாக அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றை அனுபவித்திருந்தாலே அல்லது தாங்க முடியாத அதிர்ச்சிகரமான சம்பவத்தை நேரில் பார்த்திருந்தாலோ டிசோசியேட்டிவ் அம்னீசியா ஏற்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது உங்கள் அடையாளத்தின் அம்சங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைப் பற்றிய தகவலை நினைவுபடுத்த முடியாமல் போகலாம். இந்த வகையான நினைவிழப்பு சில நிமிடங்கள், சில மணிநேரம், ஏன், சில மாதங்கள் அல்லது சில அரிதான சந்தர்ப்பங்களில், ஆண்டுகள் வரைகூட இது நீடிக்கும்.

டிசோசியேட்டிவ் டிஸார்டர்
(Dissociative Identity Disorder)

இதனை Multiple Personality Disorder எனவும் அழைக்கின்றனர். அந்நியன் திரைப்படத்தில் காட்டப்படும் Multiple Personality Disorder என்பது Dissociative வகையைச் சார்ந்த மனநோய். நமக்கான இயல்பான ஆளுமைத் தன்மையுடனே நாம் எப்பொழுதும் இருப்போம். அந்த ஆளுமைத் தன்மையை மாற்றி அல்லது மறந்து வேறொரு ஆளுமையாகச் செயல்படுவதே Dissociative Identity Disorder என்பதாகும். உதாரணத்திற்கு, இறந்த ஒருவரின் ஆவி தங்களுக்குள் புகுந்து விட்டது எனவும், தனக்கு பேய் பிடித்து விட்டது எனவும், தனக்குள் சாமி இறங்கி விட்டது எனச் சொல்வதெல்லாம் இதில் அடக்கலாம்.
கலாச்சார பண்பாட்டு ரீதியாக சாமி ஆடுவது, சாமி வந்து அருள் கூறுவது என்பதை எல்லாம் நாம் மனநலப் பிரச்னையாகக் கருதியது இல்லை. ஆனால் இம்மாதிரியான நடவடிக்கைகள் பற்றி மனநல மருத்துவத்தில் ஆதாரப்பூர்வமாக கூறியிருப்பது என்னவெனில், மனிதர்களின் மன அழுத்தத்தின் ஒரு வகையான வெளிப்பாடு என்பதாகும்.

தொகுப்பு:காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்

 

The post மூளையின் முடிச்சுகள் appeared first on Dinakaran.

Related Stories: