ஆயுர்வேதத் தீர்வு!

நன்றி குங்குமம் டாக்டர்

கரப்பான் நோய் காணாமல் போக…

உலக அளவில் எல்லா வயதினருக்கும், எல்லா நாட்டினருக்கும், ஏன்.. எல்லா உயிரினங்களுக்கும் மிகப் பொதுவாக வரக்கூடிய நோய்கள் என்றால் அது தோல் நோய்களே ஆகும். அத்தகைய தோல் நோய்களில் மிகவும் பொதுவானது எக்ஸிமா என்று சொல்லக்கூடிய கரப்பான் நோய். இந்நோய்க்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆயுர்வேத மருத்துவம் மிகவும் விரிவாக விசர்சிகா என்ற தலைப்பில், இந்நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், பஞ்சகர்மா முறைகள், உள் மருந்துகள், வெளிப்பூச்சுகள் போன்றவற்றை தெளிவாக விளக்கியுள்ளது.

எக்ஸிமா உலக மக்கள் தொகையில் 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை பாதிக்கும் ஒரு நாள்பட்ட தோல் நிலையாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது தோலின் மேல் ஏற்படும் ஒருவித சரும நோய், தோலில் காய்ந்த வட்டவடிவிலான, தடிமனான, செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும். மிகவும் அரிக்கும் தன்மை இருக்கும். இது நம் அன்றாட வேலை மற்றும் தூக்கத்தைக் கூட தொந்தரவு செய்யும். இது ஒரு தொற்றாத தோல் நோயாகும்.

ஆச்சார்யா சரகர் என்னும் ஆயுர்வேத ரிஷி, தோலில் சிவப்பு தடிப்புகள், புடைப்புகள், அதிக நீர் வெளியேற்றம், கடுமையான அரிப்பு மற்றும் பெரும்பாலும் நீல நிறமாற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு நிலை என்று விளக்குகிறார். சில சமயங்களில் வலி, வறண்ட தோல் மற்றும் புண்களும் ஏற்படும் என்று கூறுகின்றார். தோல் மீது கடுமையான அரிப்பு மற்றும் நீர் வெளியேற்றத்துடன் கூடிய கறுப்பு நிற புண்கள் பற்றிய விளக்கங்களும் பல ஆயுர்வேத நூல்களில் காணக்கிடைக்கின்றன. இன்றளவும் இந்த குறிகுணங்கள் அனைத்தையும் நோயாளிகளிடையே நாம் வழக்கத்தில் காணலாம்.

இந்நோய் பெரியவர்கள் மட்டுமல்லாது 2 வயதுக்கு குறைவான குழந்தைகளையும் கூட அதிகளவில் பாதிக்கிறது. பரம்பரையில் யாருக்காவது இந்த பிரச்னை இருந்தால் இந்த நோய் அவர்களையும் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.இன்றைய காலகட்டத்தில் இந்நோய் பெண்களுக்கு அதிகமாக வர தொடங்கியுள்ளது. குறிப்பாக உடல் எடை அதிகமாக உள்ள பெண்களில் இந்நோயோ அதிகமாக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு கால்களிலும் இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், மார்பகங்களுக்கு அடியிலும், அக்குள் பகுதிகளிலும் அதிகமாக வருகிறது. எக்ஸிமா பாதிக்கப்படும் நபர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களாக இருக்கின்றனர்.

சிறு குழந்தைகளுக்கு தாய்ப்பால் அல்லாமல் பிற பால்கள் கொடுக்கும்போது ஏற்படும் ஒவ்வாமை கூட இந்நோயை உண்டாக்கலாம். எனவே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதே சிறந்தது. முதல் மூன்று மாதங்கள் தாய்ப்பால் கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படுவது மிகவும் குறைவு.

குழந்தை பருவத்தில் ஏற்படும் இந்த கரப்பான் ஒரு கட்டத்தில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய மிகுந்த அரிப்பு, சொறி தரக்கூடிய ஒரு நாட்பட்ட நோயாக மாற வாய்ப்புள்ளது. ஆனாலும், இந்நோயால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளில், காலப்போக்கில் இந்நோயின் தாக்கம் குறைவதையும் வயதுக்கு ஏற்ப மறைந்துவிடுவதையும் நாம் பார்க்கலாம். பொதுவாக இந்த தோல் நோயானது அடிக்கடி வெளிப்புறக் காரணிகளின் அடிப்படையில் வந்து போகும் தன்மையுடையது.

காரணங்கள்

*ஆங்கில மருத்துவம் எக்ஸிமா வருவதற்கு குறிப்பிட்ட காரணம் தெரியவில்லை என்றே கூறுகிறது. சில சுற்றுச்சூழல் காரணிகள் இந்நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்தலாம் என்றும் கூறுகின்றன. அவை;

*எரிச்சலூட்டும் பொருட்கள், சோப்புகள், சவரக்காரம், ஷாம்புகள், கிருமி நாசினிகள் போன்றவை.

*ஒவ்வாமை, தூசி, பூச்சிகள், செல்லப்பிராணிகள், மகரந்தங்கள் ஆகியவை.

*நுண்ணுயிரிகள் ஸ்டேஃபிலோகோகஸ் ஆரியஸ், வைரஸ்கள் மற்றும் சில பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் இதில் அடங்கும்.

*வெப்பம் மற்றும் குளிர் வெப்பநிலை, மிகவும் வெப்பமான மற்றும் மிகவும் குளிர்ந்த வானிலை, அதிக மற்றும் குறைந்த ஈரப்பதம்.

*உணவுகள்: பால் பொருட்கள், முட்டை, பருப்புகள் மற்றும் விதைகள், சோயா பொருட்கள், மீன், நண்டு, காளான், இறால், ஷெல் பிஷ் மற்றும் கோதுமை ஆகியவை.

*மன அழுத்தம் இது நேரடி காரணம் அல்ல, ஆனாலும் இது அறிகுறிகளை மோசமாக்கும்.

*ஹார்மோன்கள்: கர்ப்பகாலம் மற்றும் மாதவிடாய் சுழற்சியின் சில காலங்களில் ஹார்மோன் அளவுகள் மாறும்போது பெண்களுக்கு அறிகுறிகளை அதிகரிக்கலாம்.

அறிகுறிகள்

*தோலில் மிகவும் அரிப்பு ஏற்படுத்தும் திட்டுகள். குழந்தைகளில், இந்த திட்டுகள் உச்சந்தலையில் மற்றும் முகத்தில், குறிப்பாக கன்னங்களில் உருவாகின்றன. பருவ வயதினர் மற்றும் இளைஞர்கள் தங்கள் கைகள் மற்றும் கால்களில் திட்டுகளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். முழங்கையின் வளைவுகள், முழங்கால்களின் பின்புறம், கணுக்கால், மணிக்கட்டு, முகம், கழுத்து மற்றும் மார்பின் மேல் பகுதி ஆகியவை இந்த திட்டுகளுக்கான பிற பொதுவான தளங்களாகும். அவை கண்களைச் சுற்றிலும் மற்றும் கண் இமைகள் உட்பட தோலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம்.

*சிவத்தல், வீக்கம், விரிசல் மற்றும் அவற்றிலிருந்து தெளிவான திரவத்தின் வெளிப்பாடு*திட்டுகள் குமிழியாகி கசிவது அல்லது செதில்களாகவும், உலர்ந்ததாகவும், சிவப்பாகவும் மாறுவது

*தோல் தடித்து மடிப்புகள் அதிகரித்தல்.

ஆயுர்வேத சிகிச்சை

ஆயுர்வேதத்தில் பொதுவாகவே தோல் நோய்கள் ரத்தத்தில் உள்ள கெட்ட நீராகத்தான் பார்க்கப்படுகிறது. எனவே ரத்தத்தை சுத்திகரித்து தோலுக்கு வலுவைக் கொடுக்கக் கூடிய மருந்துகளையே ஆயுர்வேதம் ஆதரிக்கிறது. ஆனால் சமகால மருத்துவமானது தோல் நோயாக மட்டும் பார்த்து மருந்து கொடுப்பதால்தான் இந்த நோய் முற்றிலும் குணமடையாமல், அந்த நோயாளியை வாழ்க்கை முழுவதும் துன்பப்படுத்துகிறது.

எனவே ஆயுர்வேதத்தில் முதலில் பஞ்சகர்ம சோதனை முறைகளை கையாண்டு பிறகு உள் மருந்துகளும் வெளி மருந்துகளும் கொடுத்துவர இந்நோய் முற்றிலுமாக குணமாகும். பஞ்சகர்ம முறைகளில் தோல் நோய்களில் வமனம் என்னும் வாந்தி சிகிச்சைக்கு உட்படுத்துதல், விரேசனம் என்னும் பேதி சிகிச்சைக்கு உட்படுத்துதல், ஐலெனகசரணம் என்னும் அட்டைப் பூச்சிகளைவிட்டு கெட்ட ரத்தத்தை உறிஞ்சுதல், பிரச்சனம் என்னும் முறையில் தோல்களை கீறிவிட்டு கெட்ட ரத்தத்தை வெளிவிடுதல் ஆகியவை.

நோயாளியின் வயது, நோயின் தன்மை, குறிகுணங்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப தக்க ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின்படி, அவர் முன்னிலையில் கொடுக்க, நோய் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும், மேலும் இம்மாதிரியான பஞ்ச கர்ம முறைகளை பயன்படுத்திய பிறகு உள் பிரயோகத்திற்கும் வெளி பிரயோகத்திற்கும் உரிய மருந்துகளை நோயின் தன்மைக்கேற்ப, நோயாளியின் தன்மைக்கேற்ப கொடுத்துவர இந்நோய் முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டு, பிற்காலங்களில் மீண்டும் வராமலும் தடுக்க ஆயுர்வேத மருத்துவ முறையால் கண்டிப்பாக முடியும்.

குறிப்பாக ஆயுர்வேத பழங்கால மருத்துவ முறைகளில் ஜலெளகசரணம் என்ற அட்டை விடுதல் மருத்துவம் மிகவும் பிரசித்தி பெற்ற இன்றளவும் பயன்படுத்தப்படுகின்ற சக்தி வாய்ந்த மருத்துவமாக திகழ்கிறது. இன்றளவில் பல ஆராய்ச்சிகள் அட்டைப் பூச்சிகளின் உமிழ்நீரில் பல மருத்துவ குணங்கள் இருப்பதாகவும் அதனால் அவை இந்த இடங்களில் ரத்தத்தை சுத்திகரிப்பதாகவும் கூறுகின்றன. பல மருத்துவர்கள் இந்த எக்ஸிமா நோய்க்கு இன்றளவும் இந்த அட்டை வைத்தியத்தை செய்து அதில் நல்ல பலனை பதிவு செய்துள்ளனர்.

உள்ளுக்கு கொடுக்க திக்தக கசாயம், மஹாதிக்தக கசாயம், குக்குலு திக்தக கசாயம், பஞ்ச திக்தக கசாயம் படோல கடுகுரோ ஹின்யாதி கசாயம், படோலாதி கசாயம், கதிராரிஷ்டம், மஞ்சிஷ்டாதி க்வாதம், கந்தக ரசாயணம், திக்தக நெய், மகாதிக்தக நெய், குக்குலு திக்தக நெய், கைஷோர குக்கலு, திரிபலா குக்குலு, அம்ருதா குக்குலு ஆகியவை நல்ல பலன் அளிக்கின்றன. மேற்பூச்சு தயாரிப்புகளில், லேபம் என்னும் வெளிப்புற பூச்சு பயன்பாடு, பரிஷேகம் என்னும் புண்கள் மீது திரவங்களை தெளித்தல், அவச்சுரணம் என்னும் தூள் தூவுதல், அவகாஹனம் என்னும் பாதிக்கப்பட்ட பகுதியை மருந்து திரவத்தில் நனைத்தல் மற்றும் துமம் என்னும் பாதிக்கப்பட்ட தோல் பகுதிக்கு புகை காட்டுதல் ஆகிய அனைத்து வகையான சிகிச்சைகளும் நல்ல பலன் அளிக்கின்றன.

உணவுமுறைகள்

மென்மையான, எளிதில் செரிக்கக்கூடிய உணவு, திக்த ஷாகம், (கசப்பான காய்கறிகள்), பூராண தன்யம் (பழைய தானியங்கள், முத்கம் (பச்சைப்பயறு), படோலம் (புடலங்காய்), சஷ்டிக ஷாலி (60 நாட்களில் அறுவடை செய்யப்படும் அரிசி), யவம் – பார்லி ஆகியவை சிறந்த பத்தியமாக விளங்குகின்றன. அதிகப்படியான குரு அன்னம் (செரிமானமாக கடினமான உணவுகளை உட்கொள்ளல்), துக்த (அதிகப்படியான பால் மற்றும் பால் பொருட்கள்), ஆம்ல ரசம் (புளிப்பு சுவை), ததி ( தயிர்), மத்ஸ்யம் (மீன்), குடம் (வெல்லம்) திலம் (எள்), குளத்தம் (கொள்ளு), மாஷா (உளுந்து), விதாஹி அன்னம் (காரமான உணவு), இக்ஷு விகாரம் ( கரும்பினால் தயாரிக்கப்பட்டவை) லவணம் (உப்பு உணவு), கத்திரிக்காய், கடலை எண்ணெய், வேர்க்கடலை போன்றவை எக்ஸிமாவை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது. பொதுவாக ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட உணவுகள், செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட உணவுகள், ரசாயனம் கலந்த உணவுகள் மற்றும் மேலே காரணங்களில் கூறப்பட்ட அனைத்தையும் நாம் அவசியம் தவிர்க்க வேண்டும்.

எளிமையான வைத்திய முறைகள்

கருங்காலி பட்டை பரவலாக எல்லா தோல் நோய்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மூலிகையாகும். இது எக்ஸிமா எனப்படும் இந்த கரப்பான் நோயிலும் அறிகுறிகளைக் குறைக்க குடிநீராகவும். குளியல் நீராகவும் உபயோகிக்கும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மஞ்சள், வேம்பு மரமஞ்சள், சீமைக் கருவேலம் போன்ற மூலிகைகளின் தூள்களை தூவுவது, அதிகப்படியான கரப்பு மற்றும் கசிவைக் குறைக்க பயன்படுத்தலாம்.

100 மில்லி வேப்பெண்ணெய், 100 மில்லி நல்லெண்ணெய் (எள் எண்ணெய்) மற்றும் 50 கிராம் மஞ்சள்தூள் கலந்து தயாரிக்கப்பட்ட எளிய எண்ணெய் அறிகுறிகளைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்நோயின் அறிகுறிகள் மோசமாக இருக்கும்போது, புண்களை திரிபலை கஷாயத்துடன் கழுவுவது நல்ல மாற்றத்தைத் தரும்.ஆகவே இந்த எக்ஸிமா என்ற தோல் நோய்க்கு மற்ற மருத்துவ முறைகளை விட நம் ஆயுர்வேத மருத்துவ முறையானது சிறந்த மற்றும் நிரந்தரமான தீர்வைக் கொடுக்கும் என்று சொன்னால் அது மிகையில்லை.

The post ஆயுர்வேதத் தீர்வு! appeared first on Dinakaran.

Related Stories: