2016 முதல் 2022 வரை குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் 96% அதிகரிப்பு: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் 96 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல் வௌியிட்டுள்ளது. நாடு முழுவதும் அவ்வப்போது குடும்ப உறுப்பினர்கள், வௌிநபர்கள் மூலம் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாக செய்திகள் வௌியாகின்றன. இதை பார்க்கும்போது உண்மையிலேயே குழந்தைகளுக்கு எதிராக பலாத்கார குற்றங்கள் அதிகரித்துள்ளதா? அல்லது அதுகுறித்த செய்திகள் அதிகம் வௌிச்சத்துக்கு வந்துள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது.

செய்தித் தாள், தொலைக்காட்சி என்ற ஊடகங்களை கடந்து பல்வேறு சமூக ஊடகங்கள் அதிகரித்துள்ளதால் இதுபோன்ற குழந்தை பாலியல் பலாத்கார சம்பவங்கள் பற்றிய செய்திகள் அதிகம் வௌியுலகுக்கு தெரிய வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை பாலியல் பலாத்காரம் என்றால் என்ன என்பது குறித்த சட்டவரையறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டவரின் புகார்களை காவல்துறை வழக்குப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2016 முதல் 2022ம் ஆண்டு வரை குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் 96 சதவீதம் அதிகரித்துள்ளதாக குழந்தை உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான(க்ரை) அதிர்ச்சி தகவலை வௌியிட்டுள்ளது. இதுகுறித்து க்ரை நிறுவன ஆராய்ச்சி அதிகாரி சுபேந்து பட்டாச்சார்ஜி, “இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. அனைத்து வகையான ஊடுருவல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய விரிவான ஆய்வில் 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் குழந்தை பலாத்கார சம்பவங்கள் 96.8 சதவீதம் அதிகரித்து உள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வௌியிட்ட தரவுகளின்படி, 2016ம் ஆண்டில் 19,765, 2017ல் 27,616, 2018ல் 30,917, 2019ல் 31,132, 2020ல் 30,705, 2021ல் 36,381 மற்றும் 2022ல் 38,911 குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளன. குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய வௌிப்படையான விவாதங்களை ஊக்குவிப்பது, சமூக தீர்ப்பு மற்றும் எந்த அச்சமுமின்றி பாதிப்பு குறித்து பேசுவதும், புகாரளிப்பதும் தற்போது அதிகரித்துள்ளது.

குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான நேர்மறையான விசாரணை, வழக்கு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், இந்த வழக்குகளை தடுக்க சட்டங்களை அமலாக்குவது, அதனை நீதித்துறை எவ்வாறு கையாளுகின்றன என்பதை மதிப்பீடு செய்வது அவசியம்” என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post 2016 முதல் 2022 வரை குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் 96% அதிகரிப்பு: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: