அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்று. அப்போது பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கர்நாடக தேர்தல் பிரசாரம், நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே நீதிமன்றமும் இதை தெரிவித்துள்ளது. அதிமுக இனி பிரதான எதிர்க் கட்சியாக செயல்படும். என்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவோம். நீண்ட சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறோம். ஒரு சிலரை தவிர்த்து உண்மையாக இந்த கட்சியை நேசிப்பவர்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி மீண்டும் பொதுக்குழு நடப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

அதிமுகவை பொறுத்த மட்டில் ஒற்றை தலைமை என சொல்ல வேண்டாம். நான் ஒரு சாதாரண தொண்டன் தான் கட்சிக்கு ஒரு தலைமை தேவை எனக்கு அந்த வாய்ப்பை தந்து உள்ளார்கள். என்றைக்கும் தொண்டனாகவே இருப்பேன்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறித்து சபாநாயகருக்கு மீண்டும் மனு கொடுப்போம். பாஜகவுடனான கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. ஆகஸ்ட் 20 மதுரையில் பிரமாண்டமான மாநாடு சிறப்பாக நடைபெறும். இந்திய வரலாற்றில் இவ்வளவு பெரிய மாநாடு நடைபெறவில்லை என்ற வியக்கத்தக்க மாநாட்டை நடத்தி காட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: