காலமுறை ஊதியம் வழங்கக்கோரி மருத்துவமனை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பன்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சியாமளா தேவி தலைமை தாங்கினார். இதில், இனசுழற்சிமுறை பின்பற்றப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணியிடங்களில் அரசு விதிகளின்படி தினக்கூலி அடிப்படையில் முறையாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரும் கோரிக்கையின் அடிப்படையில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்.

மேலும், 2018ம் ஆண்டு பொது சுகாதாரத்துறை இயக்குநரால், அரசுக்கு கருத்துருக்கோப்பு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு சுகாதாரத்துறை செயலர் ஒப்புதல் வழங்கி, நிதித்துறைக்கு பரிந்துரை செய்தும் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், விளிம்பு நிலை சமூகங்களின் அடித்தட்டு பணியாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, இதை வலியுறுத்தும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கணேஷ், மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர்கள் கீதா, ராஜேஸ்வரி, மாவட்ட துணை செயலாளர்கள் யூசுப், சித்திக், வள்ளி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post காலமுறை ஊதியம் வழங்கக்கோரி மருத்துவமனை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: