ஆஸ்பத்திரிக்குள் புகுந்து துணிகரம்; நர்ஸ் கெட்டப்பில் இளம்பெண்ணை விஷ ஊசிபோட்டு கொல்ல முயற்சி: வாலிபரின் காதலி கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் தனியார் ஆஸ்பத்திரிக்குள் நர்ஸ் வேடத்தில் புகுந்த வாலிபரின் காதலி, அவரது மனைவியை ஊசிபோட்டு கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் அருணன். இவரது மனைவி சினேகா (25). கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக குழந்தையுடன் சினேகா அதே மருத்துவமனையில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை ஒரு நர்ஸ் சினேகாவுக்கு கையில் ஊசி போட்டுள்ளார். உடனே அவரது கையில் கடும் வலி ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் அந்த நர்ஸ் அடுத்தடுத்து ஊசி போட்டுள்ளார். அதிகமாக வலி ஏற்பட்டதால் ஊசிபோடுவதை நிறுத்துமாறு நர்சிடம் சினேகா கேட்டுக்கொண்டார். ஆனாலும் அதனை ஏற்க மறுத்த நர்ஸ், சினேகாவின் கையில் தொடர்ந்து ஊசிபோட முயன்றார். இதனால் சந்தேகமடைந்த சினேகா கத்தி கூச்சல்போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த மற்ற நர்சுகள் ஓடிவந்தனர். பின்னர் சினேகாவுக்கு ஊசிபோட்ட நர்சை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் சினேகாகாவுக்கு அந்த பெண் விஷ ஊசி போட்டது தெரியவந்தது. மேலும் அந்த பெண் அங்கு பணிபுரியும் நர்ஸ் அல்ல என்பதும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சக நர்சுகள் சேர்ந்து சினேகாவுக்கு ஊசி போட்ட பெண்ணை பிடித்து வைத்து புளிக்கீழ் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று அந்த போலி நர்சை கைது செய்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது. நர்ஸ் வேடத்தில் வந்து சினேகாவுக்கு ஊசிபோட்ட பெண் காயங்குளத்தைச் சேர்ந்த அனுஷா (26) ஆவார். இவர் சினேகாவின் கணவர் அருணனின் காதலி என்றும் தெரியவந்தது. அருணன் அவ்வப்போது சினேகாவுக்கு தெரியாமல் தனது காதலியான அனுஷாவை சந்திப்பாராம்.

இந்த நிலையில் அனுஷா திடீரென்று நர்ஸ் வேடமணிந்து சினேகாவை எதற்காக கொல்ல முயன்றார்? என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். சினேகாவை கொலை செய்துவிட்டால் தனது காதலன் அருணனுடன் சேர்ந்து வாழலாம் என திட்டமிட்டாரா? அல்லது இந்த திட்டத்தில் அருணனுக்கும் தொடர்பு உள்ளதா? என்று அனுஷாவிடம் தீவிர விசாரணை நடந்தது வருகிறது. இதற்கிடையே விஷ ஊசி போட்டதால் பாதிப்படைந்த சினேகாவுக்கு அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post ஆஸ்பத்திரிக்குள் புகுந்து துணிகரம்; நர்ஸ் கெட்டப்பில் இளம்பெண்ணை விஷ ஊசிபோட்டு கொல்ல முயற்சி: வாலிபரின் காதலி கைது appeared first on Dinakaran.

Related Stories: