தேனியில் சூட்டை தணித்த திடீர் மழை

 

ஆண்டிபட்டி, ஏப். 24: தேனியில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் பலரும் தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் தஞ்சம் அடைந்து வருகின்றனர். பகல் நேரங்களில் கடுமையான வெயில் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கோடை காலத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் குளிர்ந்த நிலை உருவாகிறது. அந்த வகையில் நேற்று தேனி, முத்துதேவன்பட்டி, வீரபாண்டி, அன்னஞ்சி, வடபுதுப்பட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

எப்போதும் போல் நேற்று பகலில் வெயில் அதிகரித்து வந்த நிலையில் மாலை 3.35 மணிக்கு திடீரென மழை வெளுத்து வாங்கியது. இதனால் தேனி நகரில் மதுரை சாலை, கம்பம் சாலை, பெரியகுளம் சாலை பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையால் வாகனங்கள் சாலையில் ஊர்ந்து சென்றது. இதனால் அங்கு குளிர்ச்சியான நிலை உருவாகியது. கூடை வெயில் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால், கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பித்து கொள்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post தேனியில் சூட்டை தணித்த திடீர் மழை appeared first on Dinakaran.

Related Stories: