சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி மறுத்த திருத்தணி கோயில் பணியாளருக்கு இந்து மக்கள் கட்சி நிர்வாகி மிரட்டல்: துணை ஆணையர் திடீர் அனுமதியால் பரபரப்பு

திருத்தணி: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை சேர்ந்தவர் மோகன். இவர், இந்து மக்கள் கட்சியில் வேலூர் கோட்ட தலைவராக உள்ளார். இவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மோகன் வந்திருந்தார்.

திருத்தணி மலைக்கோயில் பிரதான கேட் வழியாக சிறப்பு தரிசனம் செய்ய செல்ல கேட் அருகே சுமார் அரைமணி நேரம் காத்திருந்தார். இதில், துணை ஆணையர் அனுமதியின்றி சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்க முடியாது என கோயில் பணியாளர் கூறியதை ஏற்க மோகன் மறுத்துள்ளார். மேலும், சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி வழங்குமாறு கோயில் துணை ஆணையருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினார். ஆனால் உரிய பதில் கூறவில்லை என்று கூறி உள்ளே செல்ல முயன்றுள்ளார்.

உடனே, தடுத்து நிறுத்திய கோயில் பணியாளரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதை தொடர்ந்து, மலைக்கோயில் அலுவலகத்தில் இருந்த துணை ஆணையர் விஜயாவை மோகன் சந்தித்து, கோயில்களுக்காக சேவை செய்து வரும் எங்களுக்கு சிறப்பு தரிசனம் மறுப்பது ஏன்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே அவர், மோகனின் மிரட்டலுக்கு அடி பணிந்து, சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார். பிறகு அவர் குடும்பத்துடன் தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளார். இச்சம்பவத்தால் மலைக்கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி மறுத்த திருத்தணி கோயில் பணியாளருக்கு இந்து மக்கள் கட்சி நிர்வாகி மிரட்டல்: துணை ஆணையர் திடீர் அனுமதியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: