அரசு பள்ளி என்சிசி மாணவர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

ஊட்டி : ஊட்டி அருகே நஞ்சநாடு அரசு பள்ளி என்சிசி மாணவர்கள் பேரணியாக சென்று கிராமப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நஞ்சநாடு பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டார கிராமப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

நஞ்சநாடு அரசு பள்ளி சார்பில் மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இப்பள்ளியில் 31வது தமிழ்நாடு என்சிசி. அணி சார்பில் 75 மாணவர்கள் என்சிசி பயிற்சி பெற்று வருகின்றனர். பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் என்சிசி கர்னல் உத்தரவின் பேரில் முதன்மை அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று என்சிசி மாணவர்கள் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

பள்ளி வளாகத்தில் பேரணியை தலைமையாசிரியர் துரைமூர்த்தி துவக்கி வைத்தார். இப்பேரணி பள்ளியில் இருந்து விபிஎன், நரிகுளிஆடா, மொட்டோரை என சுமார் 2 கிமீ தூரம் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற மாணவர்கள் மழைநீர் சேகரிக்க வேண்டியதன் அவசியம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், ஆசிரியர்கள் சசிபூசன், சேகர், முத்துகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளி என்சிசி மாணவர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: