வெளிநாடுகளில் தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இந்தி, சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா?

சென்னை: வெளிநாடுகளில் தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இந்தி மற்றும் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை ஒன்றிய அரசு திணிப்பதாக பட்டதாரிகள், கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு அமைப்புகளில் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் தமிழாசிரியர்களாக பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று டெல்லியில் உள்ள இந்திய பண்பாடு தொடர்பான இந்திய தூதரகம் ஒரு அறிவிப்பை கடந்த 11ம் தேதி வெளியிட்டுள்ளது.

அதில்வெளிநாடுகளில் உள்ள இந்திய பண்பாட்டு மையங்களில் தமிழாசிரியராக பணியாற்ற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலை மற்றும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம் மற்றும் பிஎட் , எம்எட் பட்டங்கள் படித்து, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தகுதியுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும் என்றும், இந்திய தத்துவவியல், வரலாறு, இந்திய பாரம்பரிய இசை, கலை மற்றும் பண்பாடு தொடர்பாக உரையாற்றும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 17ம் தேதி இறுதி நாள் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சீனியர் திட்ட இயக்குநர், இந்திய பண்பாட்டுத் தூதரகம், ஆசாத் பவன், புதுடெல்லி, 110002 என்ற முகவரிக்கு iccsection.iccr@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்த பணிக்கு வருவோர் கூடுதல் தகுதியாக இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இந்திய பண்பாட்டு மையங்களில் தமிழ் ஆசிரியர் பணியாற்ற செல்வோர் தமிழ் படித்திருக்க வேண்டும் என்று அறிவித்த ஒன்றிய அரசு கூடுதல் தகுதியாக இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவித்து இருப்பது, தமிழ் படித்த பட்டதாரிகள் இடையே பெரும் கவலை மற்றும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்தி மற்றும் சமஸ்கிருதம் படிக்காத தமிழ்நாட்டினர் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.

அதேநேரத்தில், தமிழகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இந்தி மற்றும் சமஸ்கிருதம் படித்த பிரிவினர் மட்டுமே இந்த பணிக்கு செல்ல முடியும் என்ற நிலையை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. குறிப்பிட்ட பிரிவினரை முன்னேற்றுவதற்காகவும், அவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பை வழங்குவதாகவும் இந்த அறிவிப்பு இருப்பதாக கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். அதன்படி பார்த்தால், தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பயன்பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழிகளை கற்றவர்களை ஒன்றிய அரசு வடிகட்ட நினைக்கிறது. புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை வலியுறுத்தப்பட்டுள்ளதை ஆதரிக்கும் நபர்கள் மட்டுமே இந்த பணிக்கு செல்ல முடியும் என்ற கட்டாயத்தை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசின் இந்த போக்கை கண்டித்து கல்வியாளர்கள், பட்டதாரிகள், சமூக நல ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆங்கிலத்தின் வழியாக யாருக்கு வேண்டுமானாலும் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுக்க முடியும். தமிழ் மொழியை கற்றுக் கொடுப்பதற்கு அதற்கு சற்றும் தொடர்பில்லாத இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு ஏன் தேவை என்பது புரியவில்லை.

இந்தி ஆசிரியர் பணிக்கோ, சமஸ்கிருத ஆசிரியர் பணிக்கோ தமிழ் மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்படாத நிலையில், தமிழாசிரியர் பணிக்கு மட்டும் இந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அப்பட்டமான இந்தி, சமஸ்கிருத திணிப்பு ஆகும். இதை அனுமதிக்க முடியாது. எனவே, தமிழாசிரியர் நியமனம் தொடர்பான விளம்பர அறிவிப்பில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதி என்ற நிபந்தனையை இந்திய வெளியுறவுத்துறை நீக்க வேண்டும்.

The post வெளிநாடுகளில் தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இந்தி, சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா? appeared first on Dinakaran.

Related Stories: