கூட்டணி குறித்து மேலிடம்தான் முடிவெடுக்கும்: தமிழிசை பேட்டி

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு அதிக நாட்கள் உள்ளது. கூட்டணி குறித்து மத்திய தலைமைதான் முடிவு எடுக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக பாஜ மாநில தலைமையகமான கமலாலயத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி:

பிரதமர் மோடியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு நிர்வாகியும் 74 உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்தநாள் தொடங்கி அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாள் வரை சேவை வாரம் கொண்டாடப்பட உள்ளது. 100 நாட்களில் 15 லட்சம் கோடி ரூபாய் நல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மாதாமாதம் 1000 ரூபாய் பெண்களுக்கு வழங்கும் திட்டம் உதவி செய்யும் திட்டம்தான். ஆனால் பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியது மத்திய அரசுதான்.

சிறுத்தையாக ஆரம்பித்த திருமாவளவன் கடைசியில் சிறுத்துப் போய் இருக்கிறார். ஆட்சியில் பங்கு கேட்போம் என ஒரு வீடியோவை பரவ விட்டுவிட்டு பின்னர் நான் போடவில்லை அட்மின்தான் போட்டார் என நாடகத்தை நடத்தினார். தமிழ்நாட்டில் தேசிய சாயலில்தான் கட்சி வர வேண்டும். விஜய் வேற்றுப் பாதையில் பயணிப்பார் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் இப்படித்தான் என காட்டி விட்டார். சாயம் வெளுக்கிறதா அல்லது வேறொரு சாயத்தைப் பூசிக் கொள்வாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.

சட்டசபை தேர்தல் வருவதற்கு அதிக நாட்கள் உள்ளன. கூட்டணி குறித்து மத்திய தலைமைதான் முடிவு எடுக்கும். திருமாவளவன் என்ன பல்டி அடிக்கப் போகிறார், நடிகர் விஜய் என்ன நிறத்தை மாற்றப் போகிறார் என நிறைய இருக்கிறது. 2026 வரை விசிக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் பல நாடகங்கள் நடைபெற உள்ளன. இன்னும் நிறைய கூத்துக்களை நாம் பார்க்க இருக்கிறோம். இப்போதைக்கு அமைதியாக இருந்து பாஜவில் நாங்கள் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post கூட்டணி குறித்து மேலிடம்தான் முடிவெடுக்கும்: தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: