ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் சர்ச்சை பேச்சு.. அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்; போகும் இடங்களில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

வடலூர்: பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகளில் தலையிடும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அவர் செல்லும் இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில் ஆளுநர் ஆர்என் ரவி கலந்துகொண்டு பேசியதாவது: ‘உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலார். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்தவன். அப்போது வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது மிக பிரமிப்பை ஏற்படுத்தியது. பத்தாயிரம் வருடம் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்,’ பேசியுள்ளார்.

ஆளுநரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. கடலூரில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினார். போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தை தொடர்ந்து உயர்த்தி பிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சனாதனத்திற்கு ஆதரவாகவும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்றும் அரசியல் கட்சியினர் கூறியுள்ளனர்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் சர்ச்சை பேச்சு.. அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்; போகும் இடங்களில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: