காங். ஆட்சி அமைந்தால் வன உரிமை சட்டம் நாடு முழுவதும் அமல்: பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உறுதி

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பழங்குடியினரை பாதுகாக்கும் வன உரிமை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் நேற்று பதிவிடுகையில், காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 5 முக்கிய அம்சங்களில் பழங்குடியினர்களின் நலன் காக்கும் வன உரிமை சட்டம் பற்றியதாகும். வன உரிமைகள் சட்டம் கடந்த 2006ல் நிறைவேற்றப்பட்டது.

காடுகளில் வசிக்கும் சமூகங்கள் தங்கள் காடுகளை தலைமுறை,தலைமுறையாக நிர்வகிக்கவும்,பொருளாதார நலனுக்காக வனத்தில் விளையும் பொருட்களை அறுவடை செய்யவும் அதிகாரம் அளிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக மாநில அரசுகள் அதை செயல்படுத்த தவறி விட்டன. மேலும், மோடி அரசு வன உரிமைகள் சட்டத்தை நீர்த்து போகச்செய்வதற்கான சட்டம் கொண்டு வந்ததால் சட்டத்தை அமலாக்கம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில், ஒரு லட்சம் சதுர கி.மீ.க்கு மேல் தகுதியுள்ள வன நிலம் இன்னும் வன உரிமை சட்டத்தின் கீழ் வரவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட 45 லட்சம் கோரிக்கைகளில், 23 லட்சம் ‘பட்டாக்கள்’ மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஒரு வருடத்திற்குள், நிலுவையில் உள்ள வன உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படும். ஒரு அர்ப்பணிப்பு பட்ஜெட்டுடன் நாடு முழுவதும் இந்த சட்டம் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

The post காங். ஆட்சி அமைந்தால் வன உரிமை சட்டம் நாடு முழுவதும் அமல்: பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: