ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் கட்சி தலைவர்கள் படுதோல்வி

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் படுதோல்வியை சந்தித்தனர். ஒடிசாவில் தொடர்ந்து 24 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்தவரும், பிஜூஜனதாதளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள அவரது பாரம்பரிய ஹிஞ்சிலி சட்டமன்றத் தொகுதியில் இருந்து 4,636 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், போலங்கிரின் காந்தபாஞ்சி தொகுதியில் பா.ஜவின் புதிய முகமான லட்சுமண் பாக்கிடம் 16,344 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 26 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நவீன் பட்நாயக் சந்தித்த முதல் தேர்தல் தோல்வி இதுதான்.

அதே போல் ஒடிசாவில் 78 இடங்களைப் பெற்று முதல்முறையாக பாஜ ஆட்சியைப் பிடித்தாலும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் மன்மோகன் சமல் சந்த்பாலி தொகுதியில் பிஜேடியின் பியோமகேஷ் ரேயிடம் 1,916 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பியாமகேஷ் ரே 83,063 வாக்குகளைப் பெற்றார். சமால் 81,147 வாக்குகளைப் பெற முடிந்தது. அதே போல் ஒடிசா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சரத் பட்டநாயக், நுவாபாடா சட்டமன்றத் தொகுதியில் 15,501 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தைப் பிடித்ததால் மோசமான தோல்வியை சந்தித்தார். இந்தத் தொகுதியில் பிஜேடி வேட்பாளர் ராஜேந்திர தோலக்கியா 61,822 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுயேச்சை வேட்பாளர் காசிராம் மஜி 50,941 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

* நவீன்பட்நாயக் தோல்விக்கு வி.கே.பாண்டியன் காரணமா? 2 வீடியோக்களை வெளியிட்டு காலி செய்த பா.ஜ
ஒடிசாவில் தொடர்ந்து 5 முறை வென்று 24 ஆண்டுகள் முதல்வராக இருந்த பிஜூ ஜனதாதளம் தலைவர் நவீன்பட்நாயக் இந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். அங்கு முதல்முறையாக பா.ஜ ஆட்சியை கைப்பற்றியது. நவீன்பட்நாயக் தோல்விக்கு அவரது கட்சியின் ஆதிக்கம் செலுத்திய தமிழர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன் தான் காரணம் என்ற பேச்சு தற்போது எழுந்துள்ளது. ஒடிசா பிரசாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஒடிசாவை தமிழர் ஒருவர் ஆளவேண்டுமா என்று கேள்வி எழுப்பினர். மேலும் நவீன் பேசும் போது அவரது சேரில் கால் வைப்பது, நவீன் பேசும் போது அவரது கை நடுங்குவதை வி.கே. பாண்டியன் மறைப்பது தொடர்பான 2 வீடியோக்களை பா.ஜ வெளியிட்டது. தற்போது பிரதமர் மோடி, அமித்ஷாவின் பிரசாரத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக பா.ஜ நம்புகிறது.

The post ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் கட்சி தலைவர்கள் படுதோல்வி appeared first on Dinakaran.

Related Stories: