மக்களவைத் தேர்தலில் சிறைக்குள் இருந்தபடியே வெற்றியை ருசித்த 2 சுயேட்சை வேட்பாளர்கள்: யார் இந்த ரஷீத் மற்றும் அம்ரித் பால்?

ஜம்மு-காஷ்மீர்: பிரிவினைவாத இயக்க தலைவர்கள் இருவர் சிறையில் இருந்தபடியே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கின் முக்கியமான தொகுதிகளில் ஒன்றான பார்முல்லா இந்த மக்களவைத் தேர்தலில் பெரும் அரசியல் வீழ்ச்சியை கண்டுள்ளது. சுயேச்சை வேட்பாளரான பொறியாளர் ரஷீத் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்று இருக்கிறார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இவர் தோற்கடித்துள்ளார்.

இதன்மூலம் யார் இந்த பொறியாளர் ரஷீத் என்ற தேடல் கூகுள் வலைத்தளத்தில் அதிகரித்துள்ளது. குக்வாரா மாவட்டத்தை சேர்ந்த பொறியாளர் ரஷீத் என்று பிரபலமாக அறியப்படும் ஷேக் அப்துல் ரஷீத் அரசின் கட்டுமான பொறியாளராக இருந்தவர். பின்னர் வேலை வேண்டாம் என உதறிவிட்டு அவாமி இத்தேஹாத் கட்சியை தொடங்கிய அவர் 2008, 2014 ஆகிய இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார்.

தொடர்ந்து 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். அந்த ஆண்டு தான் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் ரஷீத்தை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷீத் சிறையில் இருந்தபடியே மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார். அவருக்கான தேர்தல் பிரச்சார பணிகளை அவரது மகன்கள் அப்ரர் ரஷீத், அஸ்ரர் ரஷீத் கவனித்து கொண்டனர். பேரணிகளில் காணப்பட்ட பெரும் திரளான மக்கள் ரஷீத்துக்கு வாக்குகளாக மாறும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில் தற்போது சிறையில் இருந்தபடியே பொறியாளர் ரஷீத் பார்முல்லா தொகுதி எம்.பி.யாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று பாஞ்சாப் மாநிலம் கதூர் சாஹிப் தொகுதியில் பிரிவினைவாத இயக்கத் தலைவர் அம்ரித்பால் சிங் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்றுள்ளார். ஒன்றிய அரசுக்கு எதிராக பிரிவினை முழக்கம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கொலை மிரட்டல், பஞ்சாப் காவல்துறையினர் மீது தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட அம்ரித்பால் சிங் சிறையில் இருந்தவாறே 4.4 லட்சம் வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குல்பிரி சிங் 1.97 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

The post மக்களவைத் தேர்தலில் சிறைக்குள் இருந்தபடியே வெற்றியை ருசித்த 2 சுயேட்சை வேட்பாளர்கள்: யார் இந்த ரஷீத் மற்றும் அம்ரித் பால்? appeared first on Dinakaran.

Related Stories: