அண்ணாமலை பேனரில் நின்றிருந்தால் டெபாசிட்கூட வாங்கியிருக்கமாட்டார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அட்டாக்

பெரம்பூர்: கலைஞரின் நூற்றாண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு, சென்னை ஓட்டேரியில் உள்ள மனநல மறுவாழ்வு மையம், மன வளர்ச்சி குன்றியோர் காப்பகம், குழந்தைகள் காப்பகம் என 10 கருணை இல்லங்களுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் தலைமை வகித்தார். இதில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கீதா ஜீவன், சென்னை மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதில் அமைச்சர் சேகர்பாபு பேசியது; நாடாளுமன்ற தேர்தலில் 40-40க்கு வென்று காட்டியுள்ளோம். அடுத்து நமது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான். எனவே இன்றில் இருந்து அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கலைஞர் பிறந்தநாளில் சூளுரை ஏற்போம். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப பேசக்கூடிய நபர். காலையில் வெயில் குறைவாக இருக்கும்போது ஒன்றை பேசுவார், மதியம் வெயில் அதிகமாக இருக்கும்போது ஒன்றை பேசுவார், அதுவே மாலையில் வெயில் தணியும்போது ஒரு கருத்தை முன் வைப்பார்.

நான் சவால்விட்டு சொல்லுகிறேன், கோவையில் அண்ணாமலை என்ற பேனரில் போட்டியிட்டு இருந்தால் டெபாசிட் கூட வாங்கியிருக்க மாட்டார். அவரும் ஒரு கட்சியின் நிழலில்தான் போட்டியிட்டார். பல நேரங்களில் எங்களை குடும்ப கட்சி என சாடியவர்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தும்போது அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் நிற்கிறார் என்று அறிவித்துவிட்டுதான் தேர்தலை சந்தித்தார். நாங்கள் ஒரு குடும்பமாகத்தான் உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 என வெற்றி பெற்றதுபோல் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அந்த தேர்தலிலும் அண்ணாமலை களம் காணட்டும். முன்வைப்பு தொகையை தக்கவைப்பதற்கான பணியை தற்போதே அண்ணாமலை பார்த்துக் கொள்ளட்டும்.இவ்வாறு கூறினார்.

இதில் அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, ‘’தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி வெற்றி குறித்து அண்ணாமலை கூறியது முற்றிலும் தவறானது. திமுக அதன் கூட்டணி கட்சிகளின் கொள்கையின் அடிப்படையிலேயே வாக்குகள் கிடைத்ததே தவிர எந்தவகையிலும் தனிப்பட்ட முறையில் கலைஞரின் மகள் என்பதற்காக வாக்குகள் கிடைக்கவில்லை. ஏன் நானும் கலைஞரின் மகள்தான், மேயர் பிரியாவும் கலைஞரின் மகள்தான். இங்கு அனைவருமே கலைஞரின் மகள்கள்தான். நாங்கள் அனைவருமே தலைவரின் உடன்பிறப்புகள் போல குடும்பமாக செயல்படுகிறோம்’ என்றார். முன்னதாக நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர் ரமணி, லோகேஷ், பகுதி செயலாளர் சாமிகண்ணு, தமிழ்வேந்தன், வட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post அண்ணாமலை பேனரில் நின்றிருந்தால் டெபாசிட்கூட வாங்கியிருக்கமாட்டார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அட்டாக் appeared first on Dinakaran.

Related Stories: