மகாராஷ்டிராவில் பாஜவின் தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய பட்நவிஸ் முடிவு

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜ தலைமையிலான ஆளும் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜ 9 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. பாஜ கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜ தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று தான் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவதாக தேவேந்திர பட்நவிஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மும்பையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த பட்நவிஸ் கூறியதாவது: மகாராஷ்டிராவில் பாஜவின் தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன். சில இடங்களில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். மகாராஷ்டிராவில் பின்னடைவு ஏற்பட்டதற்கு நான் தான் பொறுப்பு.

எனவே, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தவும், குறைபாடுகளை சரிசெய்யவும் அரசு பொறுப்புகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு கட்சித் தலைமையை கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடி அவர்களது வழிகாட்டுதலின் படி செயல்படுவேன். முதல்வர் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் அஜித்பவார் ஆகியோருடன் ஒருங்கிணைந்து பணிபுரிவதில் சில பிரச்னைகள் உள்ளன. அதனையும் விரைவில் பேசி சரிசெய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இரண்டே நாட்களில் பட்நவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்திருப்பது மகாராஷ்டிர அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து முதல்வர் ஷிண்டே கூறுகையில், ‘‘ பட்நவிசுடன் விரைவில் இது குறித்து பேச உள்ளேன்’’ என்றார்.

The post மகாராஷ்டிராவில் பாஜவின் தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய பட்நவிஸ் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: