குளுகுளு ஏசி, டிவி வசதியுடன் பழநி மலைக்கோயில் 3வது வின்ச்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

பழநி: தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு வருடம் முழுவதும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்த சஷ்டி என திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். இங்கு வருடத்திற்கு சராசரியாக 1.20 கோடி பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலைக்கோயிலுக்கு பக்தர்கள் நடந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை உள்ளன. படிப்பாதையில் 693 படிகள் உள்ளன. இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், குழந்தைகள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்ய மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். துவக்கத்தில் டோலி மூலம் இதுபோன்ற பக்தர்கள் மலைக்கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உண்டானது. நவீன அறிவியலின் துவக்க காலத்திலேயே இச்சிரமங்களுக்கு விடை கண்டறியப்பட்டது. வயதானவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் செல்வதற்கு வசதியாக மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச்கள் (மின் இழுவை ரயில்), தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப் கார் இயக்கப்படுகிறது. இதில் முதலாவது வின்ச் 1966ம் ஆண்டு 22 டன்னில் அறிமுகப்படுத்தப்பட்டது. 290 மீட்டர் தூரத்தை வின்ச் மூலம் கடக்க ஆகும் பயண நேரம் 8 நிமிடம். இந்த வின்ச்சில் ஒரே நேரத்தில் 36 பேர் பயணிக்க முடியும்.

இதுபோல் 2வது வின்ச் 1981ம் ஆண்டு, 3வது வின்ச் 1988ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வின்ச்களில் 32 பேர் பயணிக்கலாம். முறையே ரூ.10 மற்றும் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கீழே இறங்குவதற்கு முறையே ரூ.10 மற்றும் ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சாதாரண நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இயக்கப்படும். விசேஷ நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. குறைந்த அளவு பக்தர்களே செல்ல முடிவதால் வின்ச் நிலையத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

வின்ச்சில் பயணிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இதை தொடர்ந்து வின்ச்சை நவீனப்படுத்தி புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. சோதனை முயற்சியாக 3 வின்ச்களில் ஒன்றை மட்டும் மாற்றி இயக்க ஆலோசிக்கப்பட்டது. இதற்காக ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் உபயமாக நவீனமுறையில் 3வது வின்ச் உருவாக்கப்பட்டது. ஈரோட்டில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த வின்ச் பெட்டியில் ஒரே நேரத்தில் சுமார் 75 பேர் பயணிக்க முடியும். முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது. தவிர, டிவி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வின்ச் கடந்த ஜனவரி மாதம் பழநி மலைக்கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

வின்ச் இயக்குவதற்கு வசதியாக அதன் நடைமேடைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தவிர, இழுவை இயந்திரத்தில் கூடுதல் செயல் திறன் கொண்ட ஷாப்ட் இயந்திரம் பொருத்தப்பட்டது. இந்த வின்ச்சை சென்னை ஐஐடி வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்து சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக பஞ்சாமிர்த டப்பாக்கள் ஏற்றப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வர். குழுவினரின் ஒப்புதலுக்கு பின் 3வது வின்ச் பக்தர்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இதன்பின், மற்ற 2 வின்ச்கள் மாற்றப்பட உள்ளன. அதிக பேர் பயணிக்கும் வகையில் வின்ச் மாற்றப்படுவதால் பக்தர்களின் காத்திருப்பு நேரம் குறையும் சூழல் உண்டாகி உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

* 2வது ரோப்காரில் 1,200 பேர் செல்லலாம்
தமிழகத்தில் முதன்முறையாக பழநி மலைக்கோயிலில்தான் கடந்த 2004, நவ. 3ம் தேதி ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது வரை செயல்பாட்டில் உள்ள இந்த ரோப்காரில் ஒரு மணி நேரத்தில் 400 பேர் வரை பயணிக்கலாம். ஆனால், பலத்த காற்று, மழைக்காலங்களில் ரோப்காரை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமமடைந்தனர். எனவே, எந்த சூழலிலும் இயக்கும் வகையில், பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் நவீன வசதிகளுடன் 2வது ரோப்கார் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இத்திட்டம் அதிமுக ஆட்சிக்காலத்தில் கிடப்பில் போடப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றத்துக்கு பின் விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என தெரிகிறது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.75 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரோப்காரில் ஒரு மணி நேரத்தில் சுமார் 1,200 பேர் பயணிக்கலாம். இந்த ரோப்கார் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் மாறும். விரைவில் பணிகளை துவக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குளுகுளு ஏசி, டிவி வசதியுடன் பழநி மலைக்கோயில் 3வது வின்ச்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது appeared first on Dinakaran.

Related Stories: