2 மாதத்துக்கு மேல் நடைமுறையில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன: இன்று முதல் அரசு அறிவிப்புகளை வெளியிட தடையில்லை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிமுறைப்படி, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லக்கூடாது, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பொது நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது, தேர்தல் கூட்டங்கள் நடத்துவதில் கட்டுப்பாடுகள், ஊர்வலம் செல்வது தொடர்பான விதிமுறைகள், வாக்குப்பதிவு நாளில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வாக்குச் சாவடியில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் அனைத்தும் தேர்தல் ஆணையம் அறிவித்தபடிதான் செய்ய வேண்டும்.

முக்கியமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு அந்தந்த மாநில ஆளுங்கட்சியினர் எந்த விதமான அரசு அறிவிப்புகள், பதவியேற்பு, அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை, நிதி வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளையும் செய்ய முடியாது. இதனால் தமிழகத்தில் கடந்த 80 நாட்களாக எந்தவித முக்கிய அறிவிப்புகள், மக்கள் நல திட்டங்களும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையர்கள் இந்திய ஜனாதிபதியை நேற்று சந்தித்து 18வது மக்களவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, வெற்றிபெற்றவர்களின் முழு விவரங்களையும் அளித்தனர். இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் நேற்றுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, இன்று முதல் தமிழக அரசு உள்ளிட்ட மாநில கட்சிகள் தங்கள் வழக்கமான மக்கள் பணிகளில் ஈடுபடலாம். அரசு உத்தரவுகள் பிறப்பிக்கலாம். தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் நிதி உதவிகளும் வழங்கலாம்.

* 3 மாநிலங்களில் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்
இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தலைமை செயலாளர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வந்தது. தற்போது, அனைத்து மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்து, தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதேநேரம் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் எம்எல்சி பதவிக்கான பட்டதாரிகள், ஆசிரியர்கள் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.

The post 2 மாதத்துக்கு மேல் நடைமுறையில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன: இன்று முதல் அரசு அறிவிப்புகளை வெளியிட தடையில்லை appeared first on Dinakaran.

Related Stories: