பொதுக்குழு, செயற்குழு முடிந்த 15 நாட்களில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி இன்று முக்கிய ஆலோசனை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, வேட்பாளர் குறித்த கருத்து கேட்கிறார்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு கூட்டணி பேச்சுவார்த்தையை கட்சிகள் தொடங்க உள்ளன. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜ வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவிற்கும் பாஜவிற்கும் இடையேயான உறவு முழுவதுமாக முறிந்து விட்டது. எந்தவித ஒட்டும் உறவும் இல்லை என்று வெளிப்படையாகவே அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். பாமகவும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் பெரிய கட்சிகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் மெகா கூட்டணியை அமைப்போம் என்று எடப்பாடி கூறி வருகிறார்.

கடந்த 26ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘அதிமுக உயிரோட்டம் உள்ள கட்சி. எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்கவோ முடக்கவோ முடியவில்லை\\” என்று ஆவேசமாக பேசினார். கூட்டம் முடிந்த அடுத்த சில நாட்களில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 9ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிஅளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கலாமா, தனித்து போட்டியிடலாமா என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி கருத்து கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலை தனித்து சந்திக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். வரும் தேர்தலில் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய தலைவர்களை நிறுத்த எடப்பாடி முடிவு செய்துள்ளார். ஆனால் அவர்கள் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் ஆட்சியிலும் இல்லை. அதே நேரத்தில் தேர்தலை தனித்து சந்தித்தால் தோல்வி தான் ஏற்படும். தோல்வி ஏற்பட்டு அவமானப்படுவதை விட தேர்தலில் நிற்காமல் இருக்கலாம் என்று கருதுகின்றனர். இதனால், எடப்பாடியிடம் இருந்து முக்கிய நிர்வாகிகள் பதுங்க தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் அவர்களுக்கு பல்வேறு ஆசைவார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில் எந்த தொகுதிகளில் யார், யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாகவும் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிகிறது. இதனால், இன்று நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

The post பொதுக்குழு, செயற்குழு முடிந்த 15 நாட்களில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி இன்று முக்கிய ஆலோசனை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, வேட்பாளர் குறித்த கருத்து கேட்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: