காட்பாடி, கணியம்பாடி பகுதிகளில் பாரத் பிராண்ட் பருப்பு மானிய விலையில் விற்பனை

வேலூர் : காட்பாடி, கணியம்பாடி பகுதிகளில் பாரத் பிராண்ட் பருப்பு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் பிரிவான இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎப்), தமிழ்நாட்டில் பாரத் பிராண்ட் பெயரில் தரமான பருப்பு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, 50 நடமாடும் வேன்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களின் முக்கிய இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிக தரம் வாய்ந்த பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வை நிலைப்படுத்தவும், உணவு, பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் பங்களிப்பை அதிகரிக்கவும் உணவு தானியங்களை மானிய விலையில் விற்பனை செய்யும் பாரத் பிராண்ட் திட்டத்தை பிரதமர் மோடி ஏற்கனவே துவக்கி வைத்தார். இந்த திட்டத்துக்கு ஏற்கனவே வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த நுகர்வோர்களிடம் அமோக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், தற்போது தமிழகத்திலும் பாரத் பிராண்ட் பெயரில் பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசின் என்சிசிஎப் அமைப்பு தொடங்கியுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, கணியம்பாடி பகுதிகளில் பாரத் பிராண்ட் பருப்பு மானிய விலையில் கிலோ ₹60க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும் 8 வண்டிக்கு தலா 1 டன் பருப்பு வழங்கப்படுகிறது.

இந்த வண்டிகள் காட்பாடி, கணியம்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு மானிய விலையில் கடலை பருப்பை கிலோ ₹60க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த பருப்பை வாங்க சொல்லி யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என வண்டி டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post காட்பாடி, கணியம்பாடி பகுதிகளில் பாரத் பிராண்ட் பருப்பு மானிய விலையில் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: