புழல் அருகே சோக சம்பவம் ஜெனரேட்டர் புகையால் மூச்சுத்திணறி தந்தை, 2 மகன்கள் பரிதாப உயிரிழப்பு

சென்னை: புழல் அருகே ஜெனரேட்டர் புகை, அறையில் சூழ்ந்ததில் தந்தை, 2 மகன்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. புழல் அடுத்த கதிர்வேடு பிரிட்டானியா நகர் 10வது தெரு ரங்கா அவென்யூ சந்திப்பு பகுதியில் வசித்து வந்தவர் செல்வராஜ் (57), மாதவரத்தில் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வந்தார். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2 வருடமாக கதிர்வேட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். செல்வராஜின் மனைவி மாலா. 17 வயதில் ஒரு மகள் உள்ளார். சுமன்ராஜ் (15), கோகுல்ராஜ் (13) என்ற 2 மகன்கள். இதில் சுமன்ராஜ் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பும், கோகுல்ராஜ் 8ம் வகுப்பும் படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் தனது 2 மகன்களுடன் சாப்பிட்டார். பின்னர் பக்கத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டிற்கு மகன்களுடன் தூங்கச் சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் செல்வராஜும், மகன்களும் வெளியே வராத நிலையில் மனைவி மாலா சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளியபடி மூவரும் சடலமாக கிடந்ததைக் கண்டு கதறி அழுதார். புழல் போலீசார் தந்தை, 2 மகன்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடன் தொல்லை காரணமாக செல்வராஜ் தனது மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இவர்கள் 3 பேரும் தூங்கிய அறையில், மின்தடங்கல் காரணமாக நள்ளிரவு ஜெனரேட்டர் இயக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வெளியேறிய புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூவரும் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜெனரேட்டர் புகையால் தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் போலீசார் இதுகுறித்து மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post புழல் அருகே சோக சம்பவம் ஜெனரேட்டர் புகையால் மூச்சுத்திணறி தந்தை, 2 மகன்கள் பரிதாப உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: