மீண்டும் விவசாயிகள் போராட்டம்: டெல்லி எல்லைக்குள் விவசாயிகள் செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகள் தீவிரம்!!

டெல்லி: விளைபொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய கோரி டெல்லியில் நாளை விவசாயிகள் மீண்டும் பெரியளவில் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். டெல்லி எல்லையில் விவசாயிகள் நுழையாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில், பஞ்சாபில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் புறப்பட்டு உள்ளனர். 2020ம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தின் போது விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்த ஒன்றிய அரசு அதனை நிறைவேற்றவில்லை என விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் பஞ்சாப், உத்திர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் சார்பில் டெல்லி நோக்கி செல்வோம் என மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 20,000 விவசாயிங்கள் இதில் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை நோக்கி டிராக்டர்களில் கிளம்பி உள்ளனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க பஞ்சாப், ஹரியானா எல்லையான அம்பாலாவில் முள் வலையங்களுடன் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலைகளில் அணிகளும் பதிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் இருந்து டெல்லிக்குள் நுழையும் எல்லை பகுதியிலும் கான்கிரீட் தடுப்புகளை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் கேமரா மூலமும் விவசாயிகள் வருகை கண்காணிக்கப்பட்டு வருகிறது. டெல்லி – உ.பி எல்லையிலும் இரும்பு மற்றும் கான்கிரீட் தடுப்புகளை அமைத்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். டிராக்டர்கள் செல்லாமல் இருக்க சாலைகளில் ஆணிகளையும் அமைத்துள்ளனர். துணை ராணுவப்படையினரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஹரியானாவில் முன்னெச்சரிக்கையாக அம்பாலா உள்பட 7 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் டீசல் விற்பனைக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டிராக்டர்கள் தடுக்கப்பட்டாள் பொது போக்குவரத்து மூலம் டெல்லி செல்ல விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி – உ.பி. எல்லையான நொய்டாவில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

 

The post மீண்டும் விவசாயிகள் போராட்டம்: டெல்லி எல்லைக்குள் விவசாயிகள் செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகள் தீவிரம்!! appeared first on Dinakaran.

Related Stories: