25 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

சென்னை: தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் நேற்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் 62 சுங்கச்சாவடிகளில் 34 சுங்கச்சாவடிகளில், மக்களவைத் தேர்தலுக்கு பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஊர்தியை பொறுத்து, ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.150 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டுக்கான கட்டண உயர்வு மிக அதிகம் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தில் 60% மட்டும் அதற்காக செய்யப்பட்ட முதலீட்டை ஈடு செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றும், மீதமுள்ள 40% தொகை பராமரிப்புக்காக செலவிடப்பட வேண்டும் என்றும் கூறப்பட்ட நிலையில், பெரும்பாலான சாலைகள் பராமரிக்கப்படுவதே இல்லை என்று ஊர்தி இயக்குநர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதி. அவ்வகையில், தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், இப்போது 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 25 சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் மாற்றி அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் 2023-24ல் ரூ. 4221 கோடி நெடுஞ்சாலை ஆணையத்தால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது 2022-23ல் வசூலான ரூ.3817 கோடியை விட 10 சதவீதம் அதிகமாகும்.

 

The post 25 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமல் appeared first on Dinakaran.

Related Stories: