பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி தலைமையில் நாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: சட்டசபை தேர்தல் பணி, கூட்டணி விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி தலைமையில் நாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் சட்டசபை தேர்தல் பணி, கூட்டணி விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்து. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.

திமுகவை பொறுத்தவரை கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இடம் பெற்றிருந்த அனைத்து கட்சிகளும் மீண்டும் இடம் பெற்றுள்ளது. இதே போல சில கட்சிகளும் திமுக கூட்டணிக்கு வர உள்ளது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜ மட்டுமே உள்ளது. அதிமுக-பாஜ கூட்டணியை உறுதி செய்தபோதிலும், தொகுதி பங்கீடு குறித்து வெளிப்படையாக இரு தரப்பிலும் எதுவும் பேசவில்லை. ஆனால் இரு தரப்பிலும் சில மறைமுக பேச்சுவார்த்தைகள் மட்டும் நடந்து வந்தன.

இதற்கிடையில் அண்மையில் சென்னை வந்த தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வருகிற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதே நேரத்தில் பாஜ தரப்பில் அதிக தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிமுக என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. அதே நேரத்தில் கடந்த முறையை ஓரிரு இடங்கள் மட்டும் அதிகமாக வழங்க அதிமுக முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு பாஜ சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் அதிமுக, பாஜ முதல் கட்டப்பேச்சு வார்த்தைக்கு பின்னர் ஒரு பட்டியல் ஒன்று வெளியானது. அது அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் வேலை பார்க்கும் நிறுவனம் மூலமாக வெளியிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அதில் அதிமுக 170 தொகுதிகளிலும், பாஜ, பாமகவிற்கு 23 தொகுதிகளிலும், தேமுதிக, அமமுக, ஓபிஎஸ்க்கு எவ்வளவு தொகுதி என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவல் கூட்டணியிலேயே இல்லாத கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு கூட்டணியில் சேராத கட்சிகள் கடும் கண்டனத்தையும், தங்களுடைய அதிருப்தியையும் தெரிவித்தனர். இதனால், அவர்கள் மீண்டும் அவர்கள் கூட்டணிக்கு வருவார்களா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கிடையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி தலைமையை ஏற்க மறுத்து வருகின்றனர். அவர்கள் அணி மாறவும் திட்டமிட்டுள்ளனர்.

அதே போல பாமகவும் அப்பா, மகன் மோதல் இருந்து வருகிறது. இதே போல தேமுதிகவும் வரும் 9ம் தேதி மாநாட்டில் கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அறிவித்து விட்டார். இதனால், இவர்கள் வருவார்களா? என்பது கேள்விக்குறியாக இருருந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையிலும், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் வருகிற 31ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், 31.12.2025 (புதன்கிழமை) காலை 10 மணிக்கு, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள், கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜ கேட்கும் தொகுதிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories: