சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரேமலதா தலைமையில் நேற்று அமைதி பேரணி நடந்தது. இதில் ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர். கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு, நினைவிடம் அமைக்கப்பட்டது. அவரது நினைவிடத்திற்கு பலரும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். இந்த நிலையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் ஆலயம் நினைவிடத்தில் குருபூஜை என்ற பெயரில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையம் அலுவலகம் அருகில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரையில் அமைதி ஊர்வலம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கருப்பு சட்டை அணிந்தும், கையில் விஜயகாந்த் புகைப்படத்தை ஏந்தியபடியும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
பின்னர், விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த விஜயகாந்த் சிலைகளுக்கும் அவர் மாலை அணிவித்தார். அப்போது தேமுதிக பொருளாளர் சுதீஷ், துணைச் செயலாளர் பார்த்தசாரதி, விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்தில் திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பிரபாகர்ராஜா எம்எல்ஏ உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
இதே போல ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவாக தலைவர் வேல்முருகன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்களும், திரைப்பட இயக்குநர்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அதே போல சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் காலை முதலே தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் திரள தொடங்கினார்கள். இதனால் கோயம்பேடு பாலம் அருகில் இருந்து நினைவிடம் வரையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. பொதுமக்களும், தொண்டர்களும் நீண்ட நேரம் காத்திருந்து விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் தொண்டர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி நினைவிடத்திற்கு வந்தனர். ஏராளமானோர் குவிந்ததால் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
* விஜயகாந்துக்கு முதல்வர் புகழாரம்
தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவு : ‘கேப்டன்’ விஜயகாந்த் நினைவுநாள், ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் – தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் நற்பணிகளை நினைவு கூர்கிறேன். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
