சென்னை: அரையாண்டு தேர்வு மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சென்னையில் நேற்று கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பூங்காக்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து கடந்த 24ம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. 12 நாட்கள் அதாவது ஜனவரி 4ம் தேதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் வேறு. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விடுமுறையை உற்சாகமாக கொண்டாடும் வகையில் சென்னைவாசிகள் நேற்று காலை முதல் சுற்றுலாதலங்களை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
இதனால் சென்னை கிண்டி சிறுவர் பூங்கா, செம்மொழி பூங்கா, கலைஞர் நூற்றாண்டு பூங்கா மற்றும் மாநகராட்சி உள்பட அனைத்து பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது. பூங்காவில் இடம்பெற்றிருந்த விளையாட்டு சாதனங்களில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடினர்.
அதே போல மாமல்லபுரத்தில் நேற்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது. உள்நாட்டு பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் அங்குள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கடற்கரை கோவில், ஐந்து ரதம், புலிக்குகை பகுதிகளுக்கு குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து சென்னைவாசிகள் மாலை நேரத்தில் மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரை பகுதியை நோக்கி படையெடுக்க தொடங்கினர். குறிப்பாக மெரினாவில் மாலை 5 மணிக்கு மேல் கூட்டம் என்பது நிரம்பி வழிந்தது. நேரம் செல்லச்செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வந்திருந்தனர். அவர்கள் கடற்கரை மணலில் ஒன்றாக அமர்ந்து பொழுதை போக்கினார்கள்.
குழந்தைகள் கடற்கரை மணலில் உற்சாகமாக விளையாடினர். இரவு 9 மணி வரை கடற்கரையில் பொழுதை போக்கிய பின்னரே மக்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், இரவு நேரத்தில் கடற்கரை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று இருந்தது. போலீசார் உடனுக்குடன் போக்குவரத்தை சரி செய்து அனுப்பினர்.
இதே போல சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்பத்துடன் அங்கேயே கொண்டு வந்த உணவை சாப்பிட்டு மகிழ்ந்தனர். இரவே மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர். இதே போல சினிமா தியேட்டர், மால்களிலும் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது.
