அதிமுக பொதுக்குழு தீர்மான விவகாரம் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி,‘‘அதிமுக பொதுக்குழு மற்றும் தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்து அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் தடை விதிக்க முடியாது.

அதுவும் செல்லத்தக்க ஒன்றாகும். அதேபோன்று ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்துக்கும் தடை விதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை கடந்த மாதம் 25ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செலயாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘அதிமுக பொதுக்குழு மற்றும் அதில் நிைறவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகிய விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உட்பட யார் மேல்முறையீடு செய்தாலும் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம்,’’ என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

The post அதிமுக பொதுக்குழு தீர்மான விவகாரம் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு appeared first on Dinakaran.

Related Stories: