கிழக்கு ஓசூர், வடக்கு சூளகிரி என 2 இடங்கள் தேர்வு ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க எந்த சிக்கலும் இல்லை: விமான போக்குவரத்து ஆணையம் அறிக்கை தாக்கல்

சென்னை: ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க எந்த சிக்கலும் இல்லை என்று விமான போக்குவரத்து ஆணையம் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஒசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன்படி, கடந்தாண்டு ஜூன் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பளவில் ஆண்டு ஒன்றிற்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி ஓசூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 5 இடங்கள் தேர்வு செய்யப்டட்டது. அதனை ஆய்வு செய்யும் பணியை, இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு ஒப்படைத்தது. அதன் பரிந்துரையின் அடிப்படையில் இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்க அரசு தேர்வு செய்தது. அதாவது கிழக்கு ஓசூர் மற்றும் வடக்கு சூளகிரி ஆகிய இரு இடங்களையும் தமிழ்நாடு அரசு தேர்வு செய்தது. இந்நிலையில், ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் விமான போக்குவரத்து ஆணையம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, அரசு தேர்வு செய்த இரண்டு இடங்களிலும் விமான நிலையம் அமைப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை என தாக்கல் செய்யப்பட்ட வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post கிழக்கு ஓசூர், வடக்கு சூளகிரி என 2 இடங்கள் தேர்வு ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க எந்த சிக்கலும் இல்லை: விமான போக்குவரத்து ஆணையம் அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: