உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க லேப்டாப், கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு ஒன்றிய அரசு திடீர் கட்டுப்பாடு: விலை உயர வாய்ப்பு

புதுடெல்லி: உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அதிகரிக்கும் வகையில், லேப்டாப்கள், டேப்லெட் மற்றும் கம்ப்யூட்டர்கள் இறக்குமதிக்கு ஒன்றிய அரசு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்களில், 65 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. 35 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுபவை. இந்த நிலையில், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாக கூறி வெளிநாட்டில் இருந்து கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு நேற்று திடீரென அறிவித்தது.

இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லேப்டாப்கள், டேப்லெட் மற்றும் கம்ப்யூட்டர்கள் போன்றவை இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற பொருட்களை அரசிடம் அனுமதி பெற்றோ அல்லது முறையான உரிமம் பெற்றுதான் இறக்குமதி செய்ய முடியும். லேப்டாப்,டேப்லெட்,கம்ப்யூட்டர்கள் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதில், ஒரு சிலவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு லேப்டாப், டேப்லெட், தனிப்பட்ட கம்ப்யூட்டர்கள், சிறிய அல்ட்ரா கம்ப்யூட்டர்கள்,சர்வர்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்யவும், இ- காமர்ஸ் இணையதளத்தில் இருந்து வாங்கப்பட்டவை, தபால் மற்றும் கூரியர் மூலம் வாங்கப்பட்டவைகளுக்கு இறக்குமதி உரிம தேவைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறக்குமதி வரி செலுத்தலுக்கு உட்பட்டது.

மேலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சோதனை, தரப்படுத்தல், மதிப்பீடு, பழுதுபார்ப்பு, திரும்பப் பெறுதல் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நோக்கங்கள் என்று 20 பொருட்கள் வரை இறக்குமதி உரிமத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதியை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக ஒன்றிய அரசு ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்க தொகை வழங்குவது மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் மீதான சுங்க வரி உயர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ,எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் இயக்குனர் அலி அக்தர் ஜாப்ரி கூறுகையில்,‘‘ ஒன்றிய அரசின் இந்த உத்தரவால், நாட்டில் இந்த பொருட்களுக்கான உற்பத்தி அதிகரிக்கும். இது புதிய உத்வேகம் அளிக்கும் என்றார். டெல், ஏசேர், சாம்சங்க, எல்ஜி, பானசோனிக், ஆப்பிள் இங்க், லெனோவா, எச்பி இங்க் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட லேப்டாப்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் குறிப்பிடத்தகுந்த அளவு சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகின்றன. திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கம்ப்யூட்டர் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

* இறக்குமதி எவ்வளவு
கடந்த 2021-22 ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் ரூ.8 லட்சம் கோடிக்கு தனிப்பட்ட கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், 2022-23ம் ஆண்டில் ரூ.4லட்சம் கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதே போல் கடந்த 2021-22 ம் ஆண்டில் மொத்தம் ரூ. 4.8 ஆயிரம் கோடிக்கு டேட்டா பிராசஸிங் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த நிதி ஆண்டில் ரூ.4 ஆயிரம் கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

The post உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க லேப்டாப், கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு ஒன்றிய அரசு திடீர் கட்டுப்பாடு: விலை உயர வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: