சித்தூரில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நோயாளிகள்

*விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் அவலம்

*3 வாட்டர் பிளாண்ட்களை சீரமைக்க கோரிக்கை

சித்தூர் : சித்தூரில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே மருத்துவமனையில் உள்ள 3 வாட்டர் பிளாண்ட்களை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள், வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும், அண்டை மாநிலமான தமிழ்நாடு, கர்நாடகா போன்ற இடங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து தங்கி சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் குழந்தைகள், மகப்பேறு, அவசர சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வார்டுகள் செயல்பட்டு வருகிறது. மகப்பேறு வார்டில் அயிரம் படுகை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் சிகிச்சை பெற வருகின்றனர்.

மேலும், மாநில அரசு கர்ப்பிணிகளை இலவசமாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வருவது, குழந்தை பிறந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்று விடுவது போன்று வசதிகள் ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் விபத்தில் காயம் ஏற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் அவரச உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சர்க்கரை நோய், இதய நோய், நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் நோயாளிகள், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க 3 இலவச மினரல் வாட்டர் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் வாட்டர் பிளாண்ட்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் அசுத்தமாகவும், குழாய்கள் உடைந்தும் காணப்படுகிறது. இதனால் நோயாளிகள்குடிநீர் வசதி இல்லாமல் கடும் அவதிப்படுகின்றனர். ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்கள் குடிநீர் இல்லாமல் கடைகளில் பாட்டில் குடிநீர் வாங்கி குடிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் புதிதாக திறக்கப்பட்ட கட்டண குடிநீர் வழங்கும் நிலையமும் மூடப்பட்டே உள்ளது.

இதுகுறித்து நோயாளிகள் கூறியதாவது: போதிய நிதி வசதி இல்லாததால் தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறோம். மருத்துவமனை டாக்டர்கள் சிறந்த சிகிச்சை அளித்தாலும், மருத்துவமனையில் அடிப்படை வசதியான குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் கடைகளில் காசு கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை உள்ளது. இனியாவது மருத்துவமனை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சித்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். பாமரிப்பின்றி உள்ள வாட்டர் பிளாண்ட்களை சீரமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post சித்தூரில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நோயாளிகள் appeared first on Dinakaran.

Related Stories: