சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர்கொள்வது தொடர்பாக சென்னையில் மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற பயிலரங்கம்: வல்லுநர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர்கொள்வது தொடர்பான மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற பயிலரங்கம் சென்னையில் நடந்தது. சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் சென்னை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் ஆகியவை இணைந்து தீவிரமான சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர்கொள்ள பல்வேறு பங்குதாரர்கள், வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளை ஒன்றிணைத்து மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தன. குருநானக்கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மாவட்ட வன அலுவலர் எஸ்.சண்முகம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் தீபக் எஸ்பில்கி மற்றும் சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் துணை இயக்குநர் எல்.சவுமியா ஆகியோர் கலந்து கொண்டனர். பயிலரங்கில் காலநிலை மாற்றத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அறிவூட்டும் செய்திகளை வல்லுநர்கள் குழு வழங்கியது.

காலநிலைமாற்ற பாதிப்பு மற்றும் மாவட்ட விவரங்கள் என்ற தலைப்பில் அண்ணா பல்கலைக்கழகம் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் இயக்குனர் டாக்டர் குரியன் ஜோசப், தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்க்கொள்ளுதல் என்னும் தலைப்பில் துணை இயக்குனர் எல்.சவுமியா, நகர்ப்புற வெள்ளத்தணிப்பு – பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் பற்றிய ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் தொழில் நுட்ப அதிகாரி டாக்டர்.எம்.தேவி, காலநிலை மாற்றத்தை எதிர்க்கொள்வதில் தமிழ்நாடு சதுப்புநில இயக்ககத்தின் பங்கு என்று தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் இயக்ககம் ஜிஐஎஸ் நிபுணர் டாக்டர் ஆர்.சரஸ்வதி, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நீடித்த வாழ்விடங்களை அமைத்தல் என்னும் தலைப்பில் எஸ்டபிள்யூடிஎஸ் மாநில திட்ட மேலாளர் டாக்டர் பிரதீப் முத்துலிங்கம், சுகாதாரமும் காலநிலை மாற்றமும் என்னும் தலைப்பில் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சுகாதார ஆலோசகர் டாக்டர் சோபா கோவிந்தன் மற்றும் வீ.பிரபாகரன் காலநிலை மாற்றத்தை புரிந்துகொள்ளல் என்னும் தலைப்பிலும் பல்வேறு விரிவுரைகளை வழங்கி உரையாற்றினர்.

இந்த வல்லுநர்களின் உரைகள் மாவட்டத்தின் காலநிலை நிலவரம், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளல், நகர்ப்புற வெள்ளத்தைத் தணித்தல், தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் இயக்கம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்க்கொள்ளும் நிலையான வாழ்விடங்களை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது. உள்ளூர் சூழல், பல்லுயிர் பெருக்கம், விவசாயம் மற்றும் மக்கள் நல்வாழ்வு ஆகியவற்றில் காலநிலைமாற்றம் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து நாள் முழுவதும் விவாதங்கள் நடந்தன. காலநிலைமாற்றத்தின் விளைவுகளை தணிக்கவும், மாறி வரும் காலநிலைக்கு ஏற்பவும், சென்னையின் கடலோர சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் கூட்டுச்செயல்பாடு அவசிய மற்றும் அவசரத்தேவை என்பதை பயிலரங்கில் பேசிய வல்லுநர்கள் வலியுறுத்தினர்.
பயிலரங்கில் கால நிலைமாற்றம் குறித்த கருத்துகேட்பு நிகழ்வை தமிழ்நாடு பசுமை கால நிலை நிறுவனம் ஈர நில நிபுணர் டாக்டர் பி.திருமுருகன் தொகுத்து வழங்கினார்.

 

The post சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர்கொள்வது தொடர்பாக சென்னையில் மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற பயிலரங்கம்: வல்லுநர்கள், அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: