தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் பிரசாரம்

சென்னை: சென்னையில் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டு வரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எழுச்சியுரையாற்றி வருகிறார்.

இதேபோல அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தொகுதி வாரியாக சென்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பியும் மறுபுறம் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதாவது, இன்று காலை 10.30 மணியளவில் வடசென்னை தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூர் மாதவரம் நெடுஞ்சாலை லட்சுமி அம்மன் கோயில் சந்திப்பில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

தொடர்ந்து காலை 11 மணியளவில் தண்டையார்பேட்டை சுங்கச்சாவடி சந்திப்பு, மாதவரம் நெடுஞ்சாலையில் பிரசாரம் மேற்கொள்கிறார். மாலை 4.30 மணியளவில் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் எம்பியை ஆதரித்து எழும்பூர் டானா தெருவில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து தயாநிதி மாறனை ஆதரித்து நுங்கம்பாக்கம் சுதந்திர தின பூங்கா அருகிலும், மாலை 6.30 மணியளவில் தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியை ஆதரித்து தி.நகர் பேருந்து நிலையம் அருகிலும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் அவர் வேளச்சேரி காந்தி சிலை அருகில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் திமுகவின் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

The post தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: