கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கவர்னர் ஆர்.என்.ரவி: இளம் புத்திக் கூர்மைமிகு போலீஸ் அதிகாரி சி.விஜயகுமாரின் மறைவு செய்தி அறிந்து வேதனை அடைகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

* அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த விஜயகுமார் பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஆகவே, விஜயகுமார் ஐ.பி.எஸ். தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டும்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: டிஐஜி விஜயகுமார் தன்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அறிந்து துயரமும், வேதனையும் அடைந்தேன். பல முக்கியமான வழக்குகளை திறம்பட கையாண்ட பெருமைக்குரியவர். அவரது மறைவு காவல் துறைக்கு பேரிழப்பு.

* தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: திறமையும், நேர்மையும் மிக்க அதிகாரியாக இருந்த இவரது தற்கொலை காவல்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது தற்கொலைக்கான காரணங்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை அறிய வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை: டிஐஜி விஜயகுமார் தற்போது நம்முடன் இல்லை என்ற செய்தி அனைவரும் மத்தியிலும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயகுமார் மீது பாஜவினர், இப்பகுதி மக்கள், மாற்றுக் கட்சியினர் என அனைவரும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள். ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் நெருங்கிய அதிகாரியாக அவர் பணிபுரிந்துள்ளார் என பலரும் கூறுகிறார்கள். காவல்துறையினரின் மன அழுத்தத்தை முதலில் குறைக்க வேண்டும். முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் இரண்டு ஆண்டுகளில் காவல்துறையில் மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். டிஐஜி விஜயகுமார் மரணம் குறித்து ‘ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம்’ அமைத்து உயர்நீதிமன்ற சூப்பர் விஷன் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

* பாமக நிறுவனர் ராமதாஸ்: கோவை சரக காவல்துறை துணைத்தலைவராக பணியாற்றி வந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணி தேர்வுகளை தமிழில் எழுதி ஐ.பி.எஸ் அதிகாரி ஆனவர். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட விஜயகுமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதை நம்ப முடியவில்லை. அவரது மன அழுத்தத்திற்கான காரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.

* மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: தமிழக காவல்துறையில், கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டு மாண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. படித்துப் பட்டம் பெற்று, காவல்துறையில் உயர் பதவிக்கு வந்த விஜயகுமார் எத்தகைய மன அழுத்தத்திற்கு ஆளானார் என்பதை யூகிக்க முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், காவல்துறையினருக்கும் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன். பாமக தலைவர் அன்புமணி: காவல்துறையை பணியாக நினைக்காமல் வாழ்க்கையாக நினைத்தவர் விஜயகுமார். குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்ற அவர், தமக்கு ஐபிஎஸ் தவிர வேறு எந்த பணியும் தேவையில்லை என்று கூறி கேட்டுப் பெற்றவர். காவல்துறையில் பணியாற்றும், காவல்துறையில் சேர விரும்பும் ஏராளமான இளைஞர்களின் நாயகனாக விளங்கியவர். காவல் அதிகாரி விஜயகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

* அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: கோவை டிஐஜி விஜயகுமாரின் மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், சக காவல்துறை அதிகாரிகளுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உரிய விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் நிலையில் பிரச்னைகளுக்கு தற்கொலை ஒன்றே தீர்வு அல்ல உணர வேண்டும்.

The post கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: