ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை நாளை தருமபுரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : . ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை நாளை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் பொதுமக்கள் தினமும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேருவதற்காக கடந்த டிசம்பர் 18-ம் தேதி ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் முதல்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமலுக்கு வந்தது. அதன்மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அதேபோல், அன்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களிலும் சார்ந்த அமைச்சர்கள் இந்நிகழ்வை தொடங்கி வைக்கவுள்ளனர். மக்களின் தேவைகளை உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெற உள்ள ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்களில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் மக்கள் எவ்வாறு பயன் பெற்று வருகின்றனர் என்பது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

The post ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை நாளை தருமபுரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: