சென்னை, திருச்சி, கோவை, மதுரை நகரங்களில் ‘விளையாடு இந்தியா’ போட்டி: இன்று மோடி தொடங்கி வைக்கிறார்

சென்னை: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ‘கேலோ(விளையாடு) இந்தியா’ என்ற பெயரில் நடத்தப்படுகிறது. அதில் 18வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இளையோர்களுக்கான ‘விளையாடு இந்தியா’ விளையாட்டுப் போட்டியும் நடக்கிறது. அதன் 6வது தொடர் தமிழ்நாட்டில் இன்று முதல் ஜன.31ம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டிகள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உட்பட 4 நகரங்களில் நடைபெறும். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி என 36 மாநிலங்கள், ஒன்றிய பிரதேசங்களில் இருந்து சுமார் 6000 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களுடன் 1600 பயிற்சியாளர்கள், அணி நிர்வாகிகள் வருகை தர உள்ளனர்.

கபடி, கால்பந்து, கைப்பந்து என அணிப் போட்டிகளும், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் என தனிநபர் போட்டிகளும் என மொத்தம் 27 வகையான விளையாட்டுகள் நடத்தப்படும். இந்த விளையாட்டுகள் ஆடவர், மகளிர் என 2 பிரிவுகளாக நடைபெற உள்ளன. சென்னை உட்பட போட்டி நடைபெறும் நகரங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்கள், உள் விளையாட்டு அரங்கள் புதுப்பிக்கப் பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தங்குவதற்கும், போட்டி நடைபெறும் இடங்களுக்கு வந்துச் செல்ல வசதியாக வாகனங்கள் வசதியும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்பார்வையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், விளையாட்டுச் சங்க நிர்வாகிகள் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் போட்டியின் தொடக்க விழா இன்று சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறகிறது. இதில் பங்கேற்கும் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திரே மோடி போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா மற்றும் ஒன்றிய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏகள், அதிகாரிகள பங்கேற்கின்றனர். தொடக்க விழாவின் போது பல்வேறு கலை மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கூடவே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் காட்சி போட்டியாக நடத்தப்படும்.
‘இளையோர் விளையாடு இந்தியா’ முறைப்படி இன்று தொடங்கினாலும் கபடி உள்ளிட்ட குழுப் போட்டிகள் நேற்றே ஆரம்பமாகி விட்டது.

* நீங்களும் பார்க்கலாம்
விளையாட்டுப் போட்டிகளை பொதுமக்கள், ரசிகர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். அதற்கு www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் நீங்கள் போட்டியை காண விரும்பும் நகரம், விளையாட்டு, தேதி ஆகியவற்றை பதிவு செய்து அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். கூடவே TNSPORTS (ஆடுகளம்) என்ற செயலியின் மூலமாகவும் அனுமதிச் சீட்டை பெறலாம்.

முதல் முறையாய்…
* விளையாட்டின் இலச்சினையாக வீர மங்கை வேலு நாச்சியார் உருவம் பயன்படுத்தப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளுக்கு இப்படி ஒரு சுதந்திர போராட்ட வீராங்கனையை, வீர மங்கையை அடையாளமாக பயன்படுத்துவது இதுவே முதல்முறையாகும்.
* ஸ்வாகுஷ் முதல் முறையாக விளையாட்டு இந்தியா களத்தில் அறிமுகமாக உள்ளது.
* தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி இத்தனை பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் தமிழ்நாட்டில் நடைபெறுவது இதுதான் முதல் முறை.
* கூடவே தேசிய விளையாட்டுப் போட்டி ஒரே நேரத்தில் 4 நகரங்களில் நடைபெறுவதும் நாட்டிலேயே இதுதான் முதல் தடவை.

இளையோர் விளையாடு இந்தியா
* 4 நகரங்கள் 1000 நடுவர்கள்
* 27 போட்டி 1200 தன்னார்வலர்கள்
* 1600 பயிற்சியாளர்கள் 6000 வீரர்கள், வீராங்கனைகள்

The post சென்னை, திருச்சி, கோவை, மதுரை நகரங்களில் ‘விளையாடு இந்தியா’ போட்டி: இன்று மோடி தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: