சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை இறுதி செய்ய இபிஎஸ் அதிரடி திட்டம்: முக்கிய நிர்வாகிகள் போட்டியிடாமல் பதுங்கல்; தோற்பவருக்கு பேரவை தேர்தலில் ‘சீட்’ என ஆபர்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களை இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் இறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் முன்கூட்டியே தொடங்கிவிட்டன. தமிழகத்தில் பல கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து அதற்கேற்ப யுக்திகளை பயன்படுத்தி வருகின்றன. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு இன்று காலை 10.35 மணியளவில் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூன் 22ம் தேதி அதிமுக பொதுக்குழு இதே வானகரத்தில் நடைபெற்றது. அப்போது, அதிமுகவில் இரட்டை தலைமைகள் இருந்தன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே முரண்கள் ஏற்பட்டு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து பல்வேறு சர்ச்சைகளுடன் நடைபெற்ற அப்போதைய பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு முறையும் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியது.

இதன் பின்னர், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் தான் இன்றைய தினம் அதிமுகவின் செயற்குழு- பொதுக்குழு கூடுகிறது. இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்தான முடிவுகள் இதில் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், தொடர்ந்து பாஜவிற்கு ஆதரவு கரம் நீட்டி வந்த அதிமுக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுவிட்டதாக நேரடியாகவே பொது வெளியில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் எடப்பாடி உள்ளார். ஏற்கனவே, தேர்தலில் வென்ற நிர்வாகிகளை போட்டியிட வைக்க நினைத்தால் அவர்கள் பதுங்கி ஓடி ஒளிந்து வருகின்றனர். இதன் காரணமாக அப்செட்டான எடப்பாடி, அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களிடம் அசைன்மென்ட் ஒன்றை ஏற்கனவே கொடுத்திருந்தார். அதாவது, ஒரு நாடாளுமன்ற தொகுதியில் ஐந்து நபர்களை வேட்பாளர் பட்டியலில் தயார் செய்து கொடுக்கவேண்டும், அந்தநபர்கள் பட்டதாரிகள், ஒப்பந்ததாரர்கள், ரியல் எஸ்டேட் செய்பவர்கள், தொழிலதிபர்கள், டாக்டர்கள், செல்வந்தர்கள், வழக்கறிஞர்களாக இருக்க வேண்டும், அவர்களின் பின்புலம், பொருளாதார நிலை, கல்வி நிலை போன்ற தகவல்கள் சேகரித்து தர வேண்டும்;

மேலும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், தேர்தல் பிரசார செலவு, பூத் செலவை ஏற்கும் நிலையில் உள்ள பணம்படைத்தவரா என்பதையும் தெரிவிக்கும்படி எடப்பாடி மறைமுகமாக கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் போட்டியிட இசைவு தெரிவித்தால் பணப்பட்டுவாடா போன்ற விஷங்களை தலைமைக்கழகம் பார்த்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஸ்பெஷல் அசைன்மென்ட்டை முடிக்க மாவட்ட செயலாளர்கள் திணறி உள்ளனர். மேலும், சொந்த கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளே தேர்தலில் போட்டியிட தயங்கும் நிலையில் புதிய நபர்களை மக்கள் எப்படி ஏற்பார்கள் என அக்கட்சி வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன.

எனினும் இதற்கான பட்டியலை இன்றைய கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியிடம் ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அவர் இறுதி செய்ய உள்ளார். அதேசமயம் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடையும் தொழிலதிபர்கள், டாக்டர்கள், விவிஐபிக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக 2026 சட்டபேரவை தேர்தலில் சீட் வழங்கப்படும் என ஆபர் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல், பாஜவுடன் அதிமுக கூட்டணி இல்லை என அறிவித்திருந்தாலும் மறைமுக பேச்சுவார்த்தைகள் சில மாதங்களாகவே இருந்து வந்தன. தற்போது சிறுபான்மையினரிடையே அதிமுகவின் செல்வாக்கு கணிசமாக உயர்வதை கண்காணித்த எடப்பாடி பாஜவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இருப்பினும், தங்களுடன் கூட்டணி வைக்காவிட்டால் அதிமுக தலைவர் மீதான ஊழல் வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி பாஜ தலைமை முடிவெடுக்கும் என தமிழக பாஜ தரப்பில் மறைமுக மிரட்டல்கள் விடுக்கப்படுகிறதாம். எனினும், இன்றைய பொதுக்குழு, செயற்குழுவில் வேட்பாளர் இறுதி பட்டியல், கூட்டணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் குறித்தும் முடிவெடுக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

* எடப்பாடி பழனிசாமி
பொதுச்செயலாளரான பின் முதல் பொதுக்குழு
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்ட பின் முதன்முறையாக பொதுக்குழு- செயற்குழு கூடுவதால் வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதேபோல், நாடாளுமன்ற கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கும் விதமாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

* 2,800 பேருக்கு அழைப்பு
அதிமுகவின் பொதுக்குழு – செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள், தேர்தெடுக்கப்பட்ட பொதுக்குழு நிர்வாகிகள், மகளிர் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பிற மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட 2,800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை இறுதி செய்ய இபிஎஸ் அதிரடி திட்டம்: முக்கிய நிர்வாகிகள் போட்டியிடாமல் பதுங்கல்; தோற்பவருக்கு பேரவை தேர்தலில் ‘சீட்’ என ஆபர் appeared first on Dinakaran.

Related Stories: