சென்னை -கோவை வந்தே பாரத் ரயில் 130 கி.மீ. வேகத்தில் செல்லும்: 44 ரயில்களின் வேகம் அதிகரிப்பு; தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: 2022-23ம் ஆண்டில் தெற்கு ரயில்வே முழுவதும் இதுவரை 44 ரயில் சேவைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. சென்னை -கோவை வந்தே பாரத் ரயில் 130 கி.மீ. வேகத்தில் செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு ரயில்வேயின் ஒருங்கிணைந்த சீரிய முயற்சிகளால் அதன் முக்கியமான ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் புதிய சென்னை – கோவை – சென்னை வந்தே பாரத் ரயில் சென்னை – ஜோலார்பேட்டை இடையே மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். புதிய வந்தே பாரத் ரயில் இலக்கை அடைய 5 மணி நேரம் 50 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதனால் பயணிகளுக்கு ஒரு மணி நேரம் 20 நிமிட பயண நேரம் சேமிக்கப்படும். சென்னை – பெங்களூரு சதாப்தி உள்ளிட்ட பிரிவில் இயக்கப்படும் மற்ற ரயில்களும் ஜூன் முதல் பயண நேரம் கணிசமாக குறைக்கப்படும்.

பல்வேறு பிரிவுகளில் வேகத்தை அதிகரித்ததன் விளைவாக, 2022-23ம் ஆண்டில் தெற்கு ரயில்வே முழுவதும் இதுவரை 44 ரயில் சேவைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் பயண நேரம் குறைகிறது. மேலும் பயணிகளுக்கு பயணம் எளிதாகிறது. இந்த வேக அதிகரிப்பு ஒட்டுமொத்த செயல்திறனையும் மேம்படுத்தும். இதனால் சரக்கு போக்குவரத்தும் மேம்படும். தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு 2037 கி.மீ. நீளமுள்ள பாதையில், வேகத்தை மேம்படுத்தும் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் மண்டலம் முழுவதும் 1445 கி.மீ. நீளத்திற்கான இணைப்பு பாதைகளின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் 413 கி.மீ. தூரத்துக்கு ரயில்பாதைகளில் அதிகபட்ச வேகம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 29ம் தேதி முதல் சென்னை – ரேணிகுண்டா இடையே 134.3 கிமீ தூரம், தற்போதுள்ள 110 கி.மீ. வேகத்தை 130 கி.மீட்டராக அதிகரிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல அரக்கோணம் – ஜோலார்பேட்டை இடையே 144.54 கி.மீ. தூரம் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 110 கி.மீ. இருந்து 130 கி.மீ. ஆக அதிகரிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை -கூடூர் இடையே கடந்த 2022 அக்டோபர் மாதம் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் 130 கி.மீ. ஆக ஆனது. 2022-23 ஆண்டில் தெற்கு ரயில்வேயின் பல்வேறு முக்கிய பிரிவுகளில் 1218 கி.மீ. தூரம் வரை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 110 கி.மீ. ஆகவும், 406 கி.மீ. தூரம் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் 100 கி.மீ. ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே முழுவதும் உள்ள பல்வேறு நிலையங்களில் 1,445 கி.மீ. தூரம் உள்ள இணைப்பு பாதைகளின் வேகம் தற்போதுள்ள 15 கி.மீ. முதல் மணிக்கு 30 கி.மீ. வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பயண நேரத்தை குறைக்கவும் பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் ரயில் இயக்கத்தை தெற்கு ரயில்வே உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை -கோவை வந்தே பாரத் ரயில் 130 கி.மீ. வேகத்தில் செல்லும்: 44 ரயில்களின் வேகம் அதிகரிப்பு; தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Related Stories: