புத்தாண்டை கொண்டாட ரஷ்யா பயணம் பெலாரசில் சிக்கித் தவிக்கும் 7 பஞ்சாப் இளைஞர்கள்: உக்ரைனுக்கு எதிரான போரில் களமிறக்கிய பரிதாபம்

புதுடெல்லி: ரஷ்யாவை சுற்றிப் பார்க்க சென்ற 7 பஞ்சாப் இளைஞர்கள் பெலாரஸ் நாட்டிற்கு சென்றதால், அவர்கள் ராணுவத்தில் சேர்ந்து உக்ரைனுக்கு எதிராக போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 27ம் தேதி புத்தாண்டைக் கொண்டாட பஞ்சாப்பை சேர்ந்த ஏழு நண்பர்கள் ரஷ்யா சென்றனர். அவர்கள் 90 நாட்கள் விசாவுடன் ரஷ்யாவிற்கு சென்ற அந்த இளைஞர்களை, அவர்களது டூரிஸ்ட் முகவர் அருகிலுள்ள பெலாரஸ் என்ற நாட்டிற்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் அந்த நாட்டிற்கு செல்வதற்கு ‘விசா’ தேவை என்பது அவர்களுக்குத் தெரியாது. எனவே ‘விசா’ இல்லாத காரணத்திற்காக 7 இளைஞர்களையும் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் ரஷ்ய மொழியில் இருந்த ஆவணத்தில் கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்தினர். மேலும், ‘ஆவணத்தில் கையொப்பமிடவில்லை என்றால், விசா இல்லாமல் பெலாரஸ் வந்ததற்காக பத்து ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். தப்பிக்க முயன்றால் ரஷ்ய இராணுவத்தில் சேர வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

வேறுவழி இல்லாததால் ரஷ்ய ராணுவத்தில் சேருவதாக 7 இளைஞர்களும் சம்மதம் தெரிவித்தனர். பின்னர் அவர்களுக்கு 15 நாட்கள் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த 7 இளைஞர்களும் ராணுவ உடையில் வெளியிட்ட வீடியோவில், ‘உக்ரைனுக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு எங்கள் 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கதறினர். சுமார் 105 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ரஷ்ய ராணுவத்தின் சீருடையை போன்ற ஜாக்கெட் மற்றும் தொப்பி 7 இளைஞர்களும் அணிந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, இந்தியாவை சேர்ந்த சிலர் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாகவும், அவர்களில் பலர் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இவ்விவகாரம் தொடர்பாக ஒன்றிய வெளியுறவு துறை விசாரணை நடத்தி, மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக ஒன்றிய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

The post புத்தாண்டை கொண்டாட ரஷ்யா பயணம் பெலாரசில் சிக்கித் தவிக்கும் 7 பஞ்சாப் இளைஞர்கள்: உக்ரைனுக்கு எதிரான போரில் களமிறக்கிய பரிதாபம் appeared first on Dinakaran.

Related Stories: