காவிரி விவகாரத்தில் திமுக-அதிமுக காரசார விவாதம் துணிச்சல் பற்றி திமுகவுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

சென்னை: காவிரி விவகாரத்தில் திமுக-அதிமுக இடையே பேரவையில் காரசார விவாதம் நடந்தது. அப்போது, துணிச்சல் பற்றி திமுகவுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்தின் மீது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: காவிரி நீர் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும். அதை வலியுறுத்த வேண்டுமென்று தீர்மானத்தில் தெரிவிக்க வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக கேட்கிறது என்ற தீர்மானத்தைதான் இப்போது சொல்லியிருக்கிறேன்
எடப்பாடி பழனிசாமி: கர்நாடக அரசு திறக்க வேண்டுமென்று அதில் தெரிவிக்கப்படவில்லை. பெங்களூருவில் நடந்த ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தில் முதல்வர் கலந்துகொண்டார். அப்போதே கர்நாடக முதல்வரிடம் நட்பின் அடிப்படையில் காவிரியில் தண்ணீர் கேட்டிருக்க வேண்டும்.
சபாநாயகர் அப்பாவு: நீங்கள் பிரதமரை சந்தித்த போது, காவிரியில் தண்ணீர் தர கேட்டிருக்கலாமே?.
எடப்பாடி பழனிசாமி: நாங்கள் பிரதமரை சந்தித்தபோது எல்லாம் காவிரி பிரச்னை குறித்து பேசியிருக்கிறோம்.
அமைச்சர் துரைமுருகன்: காவிரி பிரச்னையில் நீதிமன்றம் சென்றிருக்கிறோம். அப்படி இருக்கும் போது கர்நாடக முதல்வருடன் இதுகுறித்து பேசினால், நீங்களே பேசி முடித்துக் கொள்ளுங்கள் என்று நீதிமன்றம் சொல்லிவிடும். அவ்வாறு பேசினால், நமது உரிமையை அடகு வைப்பதற்கு சமம். அப்படி செய்தால் நமது அறியாமையின் அடையாளம்.
எடப்பாடி பழனிசாமி: அப்படிப்பட்ட கட்சியுடன் ஏன் கூட்டணியில் இருக்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: கூட்டணி வேறு, உரிமை வேறு. ஒரு அணி சேர்ந்தால் நமது கொள்கைகளை எல்லாம் விட்டு விட்டு செல்வதல்ல. ‘இந்தியா’ கூட்டணி என்பது எப்படியாவது பாஜவை ஆட்சியை விட்டு இறக்க வேண்டும் என்று உருவானது. அது தான் இந்த கூட்டணியின் நோக்கம்.
எடப்பாடி பழனிசாமி: காவிரி பிரச்னையில் நமது உரிமையை பெற அதிமுக எம்.பி.க்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள்.
அமைச்சர் ரகுபதி: அன்றைய தினம் பாஜவை காப்பாற்ற வேண்டிய சூழலில் நாடாளுமன்றத்தை முடக்கினீர்கள். காவிரி பிரச்னைக்காக எடுத்த நடவடிக்கை அல்ல.
எடப்பாடி பழனிசாமி: காவிரி விவகாரம் குறித்து ஏன் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் பேசவில்லை?.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பேசியதை நிரூபிக்கவா? இல்லாதது பொல்லாததை எல்லாம் சொல்லக் கூடாது. ஆதாரம் இருந்தால் மட்டும் சொல்லுங்கள். எந்த ஆதாரத்தை வைத்து பேசவில்லை என்று சொல்கிறீர்கள்.
அவை முன்னவர் துரைமுருகன்: எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றாக தெரியும். அந்த நேரத்தில் இந்த குழப்பம் உள்ளதால் அவருக்கு மறந்து போய் இருக்கும்.
எடப்பாடி பழனிசாமி: அதிமுக ஆட்சியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த காலதாமதம் செய்த காரணத்தால் ஒன்றிய அரசு மீது அவமதிப்பு வழக்கு துணிச்சலோடு தொடர்ந்தோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: துணிச்சலை பற்றி எதிர்கட்சி தலைவர் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்ன துணிச்சல் என்பது எங்களுக்கு தெரியும். நிச்சயமாக, உறுதியாக பலமுறை காவிரி பிரச்னைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளோம். பலமுறை அவையை நடத்த முடியாத அளவுக்கு செய்துள்ளோம். நான் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற வேண்டும் என்பதால் நாங்கள் அமைதியாக உட்கார்ந்து உள்ளோம் என்ற காரணத்தால் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என கருதுகிறாரா, உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு, தவறான கருத்துகளை அவையில் பதிவு செய்யும் போது அதனை மறுப்பது எங்களது கடமை.
எடப்பாடி பழனிசாமி: நாங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். எங்களுக்கும் கேட்க உரிமை உள்ளது?
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தவறான தகவல்களை சொல்லும்போது தான் தவறு என்று மறுக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை. உங்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் எல்லா உரிமையும் உண்டு. அதில் நான் ஒருபோதும் நுழையவும் மாட்டேன். அது மரபும் அல்ல.
எடப்பாடி பழனிசாமி: அதிகப்படியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தான் சொல்கிறோம். விவசாயிகளுக்கு தேவையான அளவு நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். தண்ணீர் தேவையை அரசு எவ்வாறு சரிசெய்யப் போகிறது?. அதிமுகவை பொறுத்தவரை கர்நாடகத்தில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. எனவே, இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறோம். தமிழ்நாடு அரசு முழு மனதோடு செயல்பட்டால் தான் நமக்கு நீரை பெற முடியும். இந்த விவகாரத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எப்போதும் அதிமுக தமிழக அரசோடு துணை நிற்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

The post காவிரி விவகாரத்தில் திமுக-அதிமுக காரசார விவாதம் துணிச்சல் பற்றி திமுகவுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: