தினமும் மது குடித்துவிட்டு துன்புறுத்துகிறார் அம்மாவை அடிக்கும் அப்பாவை பிடித்து ஜெயிலில் போடுங்க சார்: காவல் நிலையத்தில் சிறுவன் புகார்

திருமலை: ‘தினமும் மது குடித்துவிட்டு அம்மாவை அடித்து துன்புறுத்தும் எங்க அப்பாவை பிடித்து ஜெயிலில் போடுங்க சார்’ என சிறுவன் காவல் நிலையத்துக்கு வந்து புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சிறுவனின் தந்தையை அழைத்து எச்சரித்து அனுப்பினர். ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள கர்ரப்பள்ளம் மண்டலம், இஸ்லாம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுபானி- சுபாம்பி தம்பதியினர். இவர்களது மகன் ரஹீம்(9). இஸ்லாம் பேட்டையில் உள்ள ரைஸ் மில் ஒன்றில் வேலை செய்யும் சுபானி தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவதாக தெரிகிறது. தினமும் தனது தாயை அடிப்பதை பார்த்து பொறுக்க முடியாத சிறுவன் ரஹீம், நேற்று முன்தினம் அதே ஊரில் உள்ள காவல் நிலையத்துக்கு நேரடியாக சென்றான்.

அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார், ‘எதற்காக காவல் நிலையம் வந்தாய்’ என கேட்டனர். அதற்கு, ‘என்னுடைய தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து எங்க அம்மாவை அடித்து துன்புறுத்துகிறார். அடிக்க வேண்டாம் என்று என் தாய் கெஞ்சி கேட்டாலும் எங்க அப்பா அவரை விடுவதில்லை. எனவே அவரை பிடித்து ஜெயில்ல போடுங்க சார்’ என சிறுவன் கூறினார். உடனடியாக போலீசார் ரஹீம் வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோர் இருவரையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

The post தினமும் மது குடித்துவிட்டு துன்புறுத்துகிறார் அம்மாவை அடிக்கும் அப்பாவை பிடித்து ஜெயிலில் போடுங்க சார்: காவல் நிலையத்தில் சிறுவன் புகார் appeared first on Dinakaran.

Related Stories: