சென்னை: குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க மறுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், என்னுடைய பாஸ்போர்ட் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலாவதியாகி விட்டதால், அதை புதுப்பிக்க விண்ணப்பித்தேன். ஆனால் என் விண்ணப்பத்தை பரிசீலித்த மண்டல பாஸ்போர்ட் அதிகாரி என் மீது தடா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறி அதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு விளக்கம் அளித்த நான் தஞ்சாவூரில் 31 ஆண்டுகளுக்கு முன்பு 1994ம் ஆண்டு தடா வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று வரை திருச்சி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் 2013ம் ஆண்டு பதிவான வழக்கும் விசாரணையில் தான் உள்ளது. இந்த வழக்குகள் எனக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்பே பதிவானது என்று கூறியிருந்தேன். ஆனால், இதுவரை என் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வில்லை. அதனால் புதுப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.இளங்கோவன் ஆஜராகி குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறி பாஸ்போர்ட்டை புதுப்பிக்காமல் இருப்பது தவறு என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது என புதுப்பித்து வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
மத்திய அரசு மற்றும் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் மீது தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் தீர்ப்பின்படி, குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறி பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுக்க முடியாது. அதனால் 8 வாரத்துக்குள் மனுதாரர் பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க வேண்டும் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார். மனுதாரர் வழக்கு நிலுவையில் உள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பின்னரே வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
The post குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
