மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி கத்தப்பட்டியில் தனியார் பவுண்டேசன் சார்பில் உருது பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த 13 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். நேற்று முன்தினம் அங்கு படித்த 9 வயது மாணவனை காணவில்லை என, பள்ளி நிர்வாகம் மேலூர் போலீசாருக்கு புகார் அளித்தது. இதுகுறித்து பள்ளிக்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, 9 வயது மாணவனை அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவன் காய்கறி நறுக்கும் கத்தியால் கழுத்து, முதுகு பகுதியில் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு படுகொலையில் முடிந்தது உறுதியானது.
மேலும் கொலை செய்யப்பட்ட மாணவன் உடலை அப்பகுதியில் செப்டிக் டேங்க் அமைப்பதற்காக தோண்டியுள்ள பள்ளத்தில், இழுத்து சென்று போட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் கொலை செய்த மாணவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது தாயார் குறித்து தவறாக பேசியதால், ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறியுள்ளார்.
The post தாய் குறித்து அவதூறாக பேசியதால் ஆத்திரம்; 9 வயது சிறுவனை கொன்ற 13 வயது மாணவன் கைது: செப்டிக் டேங்க் குழியில் உடலை மறைத்த கொடூரம் appeared first on Dinakaran.