காருக்குள் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில வாலிபர்: போலீசார் தொடர்ந்து விசாரணை

குன்றத்தூர்: பூட்டிய காருக்குள் பிணமாக கிடந்த ஆண் சடலம், மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில வாலிபர் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குன்றத்தூர் அருகே நத்தம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவர், அதே பகுதியில் சொந்தமாக கம்பெனி நடத்தி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை, கடந்த 3 நாட்களாக வீட்டின் முன்பு சாலையோரமாக நிறுத்தியுள்ளார். அதன் மீது தார்பாய் போட்டு மூடிவைத்திருந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு கார் கவர் மூடியிருந்த அவரின் காரின் முன்பக்க விளக்குகள் திடீரென வெகு நேரம் எரிந்து கொண்டிருந்தது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே, இது குறித்து கோபிநாத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், அவர் வந்து காரின்மேல் மூடியிருந்த தார்பாயை விலக்கி பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதில், காரின் டிரைவர் இருக்கையில் ஒரு வாலிபர் சீட் பெல்ட் அணிந்த நிலையில் இறந்து கிடப்பதையும், அதன் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்து கிடப்பதையும் கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். இதைத் தொடர்ந்து, காருக்குள் பிணமாக கிடந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றினர். ஆனால் உடம்பில் எந்த காயங்களும் இல்லை என தெரிய வந்தது. பின்னர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், காருக்குள் இறந்த நிலையில் கிடந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். இதில், முதல் கட்ட விசாரணையில், காருக்குள் இறந்து கிடந்தவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் சிங் (20) என தெரிய வந்தது. இவர், தனது அக்கா மற்றும் மாமாவுடன் சேர்ந்து திருமுடிவாக்கம் சிப்காட்டில், ஒரு தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக, வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், கடந்த சில மாதங்களாக அஜய்குமார் சிங்க்கு மனநிலை பாதிக்கப்பட்டதால், அவரை தனியார் கம்பெனி நிர்வாகம் கடந்த வாரம் வேலையை விட்டு நிறுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, நத்தம் பகுதியில் பூட்டிய காருக்குள் அஜய்குமார் சிங் நேற்றுமுன்தினம், எப்படி மர்மமான முறையில் இறந்த நிலையில் இறந்தார் என்பது குறித்தும், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனவே, மனநிலை பாதிக்கப்பட்ட ஜார்கண்ட் வாலிபரை மர்ம கும்பல் அடித்து கொலை செய்து காருக்குள் பிணமாக போட்டுவிட்டு சென்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் குன்றத்தூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, அஜய்குமார் சிங் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்பது பற்றி முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

The post காருக்குள் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில வாலிபர்: போலீசார் தொடர்ந்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: